பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59

தாமதித்தால், மனம் பாவத்தில் திளைக்க ஆரம்பித்துவிடும்’ என்பது அவர் திருவாக்கு. ‘மனத்துக்கண் மாசில’னாக ஆவதற்குரிய வழிகளையும் அவர் வகுத்துக் காட்டியுள்ளார். ஆனால் எந்த வழியானாலும் அதில் இடைவிடாத முயற்சி வேண்டும். இதனை அவர் வாழ்நாள் முழுதும் வற்புறுத்தி வந்தார். ‘கருத்துடைமையே நித்தியமான நிருவாண மோட்சத்திற்கு வழி; மடிமையே மரணத்திற்கு வழி,’ என்று அவர் தெரிவித்தார். இதை விளக்க ஓர் உதாரணம் கூறினார். ஆற்றின் மறுகரைக்குச் செல்ல விரும்பும் ஒருவன் இக்கரையிலேயே நின்றுகொண்டு, அக்கரையே, வா, வா!' என்று கூறினால், அது வருமா? அம்மட்டோடு நில்லாமல், அவன், இருந்த இடத்திலேயே போர்த்திப் படுத்துக்கொண்டு தூங்கத் தொடங்கினால், அவன் மறுகரையை அடைய முடியுமா? இதற்கும் மேலாகத் தன் கால்களையும் கைகளையும் தளைகளால் நன்றாகக் கட்டிக்கொண்டு துயின்றால், எந்தக் காலத்திலாவது அவன் அக்கரையை அடைய முடியுமா? அந்த மனிதனைப் போலவே மக்கள் முயற்சியில்லாமல் இருப்பதுடன், துன்ப விலங்குகளையும் மாட்டிக் கொள்கின்றனர் என்று அப்பெருமான் விளக்கிச் சொல்வ துண்டு. அவரது இறுதிக் காலத்தில் அவர் சீடர்களைப்பார்த்து, “நீங்கள் நல்ல கதியை அடைவதற்காக இடைவிடாமல் கருத்தோடு உழையுங்கள்!” என்று கூறினார். இவற்றை யெல்லாம் கருத்திலே கொண்டுதான் அசோகரும், இடைவிடாமல் முயற்சி செய்யும்படி, கால வெள்ளத்திலே அழியாத கல்லிலே பொறித்து வைத்தார்.