பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நல்ல ஆட்சி புரிந்து, அல்லும் பகலும் மக்கள் நலனை நாடிவந்த அசோகர், தாம் விழிப்போடிருந்து வேலை செய்தது போதாது என்று மனக்குறை கொண்டிருந்தார். ஒரு கல்வெட்டில் அவரே பின் கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்: “நான் விழிப்போடிருக்கும் வேளையிலோ, செய்து முடிக்கும் காரியத்திலோ எனக்கு ஒருபோதும் அமைதி ஏற்படவில்லை. மக்களின் நலனுக்காக நான் சேவை செய்ய வேண்டும் என்றே கருதுகிறேன்; இது முற்றுப் பெறுதல் விழித்திருப்பதையும், முறைப்படி செயலாற்றுவதையும் பொறுத்திருக்கிறது. எல்லா மக்களும் நன்மை அடையும்படி பணியாற்றுவதைவிட எனக்கு வேறு வேலையில்லை.” அசோகர் உள்ளக்கிடக்கை மேலே கூறியவற்றிலிருந்து தெளிவாகத் தெரியும். இத்தனைக்கும் அவர் பாரதப் பேரரசர்; பல்லாயிரம் போர் வீரர்கள் வில்லும் வாளும், ஈட்டியும், வல்லயமும், கேடயமும் தாங்கித் தொடர்ந்து வரவும் படைத் தலைவர்கள் அனைவரும் சேவித்துக் கட்டியம் கூறவும், மன்னர்கள் அடிபணியவும், மதயானையின் பிடரி மேல் வீற்றிருந்து ஆணை செலுத்திய அரசர் பிரான்!

அசோகரைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் மிகச் சுருக்கமாகவே கிடைத்துள்ளன; ஆனால், புராணக் கதைகளே அதிகம். அவரைப் பற்றியும், அவர் தந்தையார், பாட்டனார் பற்றியும் யவனத் தூதர்களும், வரலாற்று ஆசிரியர்களும் கூறும் செய்திகளிலிருந்து நாம் அவர்களைப் பற்றி ஓரளவு தெரிந்துகொள்ள முடிகின்றது. நீண்ட காலம்