பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65

ருந்தன. நாள்தோறும் ஆயிரம் ஆயிரமாக மக்கள் பெளத்த தருமத்தை ஏற்றுக் கொண்டனர். புத்தரைப் போல, அவர் காலத்திலேயே தோன்றிய மாவீரரும், அவருடைய அடியார்களாகிய சைனத் துறவிகளும் தங்களது சமண சமயத்தைப் பரப்பி வந்தனர். வேதங்களை ஆதாரமாய்க் கொண்டு யாகங்கள் முதலியவை இயற்றுவதை இச்சமயங்கள் கண்டித்தன. இவை பழைய வைதிக இந்து தர்மத்திற்கு எதிராக விளங்கியதால், இந்து சமயத்தாரும் இவற்றைச் சமாளிப்பதற்காக எதிர்ப்பிரசாரம் செய்து வந்தனர். இவ்வாறு அக்காலத்தில் வட இந்தியா முழுதும் சமய ஆராய்ச்சிகளும், பிரசாரங்களும், வாதங்களும் நிறைந்திருந்தன.

அசோகர் காலத்திலும் சமண, பெளத்தப் பிரசாரங்கள் தீவிரமாக நடந்து வந்தன. ஆயினும் அப்பொழுது அவை சில சில பகுதிகளிலேயே உரம் பெற்று வந்தன. அவை பின்னால் இமயம் முதல் குமரிவரை பரவிப் பல்கிப் பெருகி வந்ததையும், அவற்றின் சிறந்த பண்புகளை இந்து சமயமே ஏற்றுக் கொண்டதையும் சரித்திரத்திலே காண்கிறோம்.

அசோகர் அரியணை ஏறிய பின் 13 ஆண்டுக்காலம் தம் தந்தையைப் போலவும், பாட்டனார் சந்திரகுப்தரைப் போலவும் முறையாக ஆண்டு வந்தார். நல்ல வேளையாக அவருக்குப் பேரரசை அமைக்கும் பொறுப்பு இல்லை; அதை முந்தியவர்களே செம்மையாகச் செய்து முடித்துவிட்டார்கள். ஆயினும், தெற்கே இருந்த தமிழகமும், கீழைக்-