பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69

களத்திலும் படை வீரர் அல்லாதார்மீதும், பயந்து ஓடுவார்மீதும், காயமடைந்தார் மீதும், முதியோர் இளைஞர்மீதும், ஆயுதங்களை அவர்கள் செலுத்துவதில்லை. ஆயினும், வெற்றிகொண்ட நகரங்களைத் தீக்கிரையாக்குதல் அவர்தம் வழக்கமாயிருந்தது. அழித்த ஊர்களில் கழுதை பூட்டிய ஏர்களால் உழுது, எள்ளும் கொள்ளும் விதைத்தலும் உண்டு. பகைவரின் நாட்டைச் சுட்டெரிக்கும் நெருப்புப் புகையினால் மன்னன் அணிந்த மலர் மாலை வாடவேண்டும் என்று கவிஞர் வாழ்த்துவது உண்டு.

அசோகரின் கலிங்கப் போர், ஏறக்குறைய 1400 ஆண்டுகளுக்குப் பின் முதற் குலோத்துங்க சோழர் வட கலிங்கத்தின்மீது படையெடுத்ததை நினைவூட்டும். முந்திய போரைப் பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை. ஆனால், பிந்தியதைப் பற்றிக் ‘கலிங்கத்துப் பரணி’ என்ற தெவிட்டாத செந்தமிழ் நூலே இருக்கின்றது. கி. பி. 1096 இல் குலோத்துங்கர் கலிங்கத்தின்மீது முதன் முதலில் படையெடுத்து வென்றார். பதினாறு ஆண்டுகட்குப் பின் அவருடைய படைத் தலைவனான கருணாகரத் தொண்டைமான் பெரும்படையுடன் சென்று, கலிங்கத்தை வென்று, கலிங்க மன்னன் அனந்த வன்மனைச் சிறை செய்துகொண்டு, காஞ்சி மாநகருக்குத் திரும்பினான். இந்தப் போரைப் பற்றி உரைப்பவர்க்கு ‘நாவாயிரமும், கேட்பவர்க்கு நாளாயிரமும் வேண்டும்’ என்று கலிங்கத்துப் பரணி கூறுகின்றது.

1155-5