பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5. பேரரசரின் சின்னங்கள்

கலிங்க வெற்றிக்குப் பின்னர் அசோகர் முப்பது ஆண்டுகள் வாழ்ந்து ஆட்சி புரிந்து வந்தார். பெளத்த தருமத்தில் அவருக்கு இருந்த ஈடுபாட்டினால் அத்தருமத்தை வழங்கிய புத்தர் பெருமானிடத்தும் அவர் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். உபகுப்தர் என்ற பெளத்த குருவுடன் அவர் புத்தர் வாழ்ந்த பல தலங்களுக்கும் யாத்திரை சென்றார். பெருமான் அவதரித்த தலமாகிய உலும்பினியில் 'இங்கேதான் பகவான் அவதரித்தார்' என்று உபகுப்தர் கூறக் கேட்டு, அசோகர் அங்கே ஒரு கல் தூணை நட்டு, அதிலே தாம் அங்கு யாத்திரை சென்ற செய்தியைப் பொறித்து வைத்ததுடன், உலும்பினியும், அதைச் சுற்றியிருந்த கிராமங்களும் தீர்வை செலுத்த வேண்டியதில்லை என்றும் அறிவித்தார். புத்தர் ஞானமடைந்த புத்தகயையில் அவர் ஓர் அழகிய கோயிலை அமைத்தார். புத்தர் வாழ்ந்த கபிலவாஸ்துவிலும், அவர் பொன் உடலை நீத்த குசீநகரிலும், மற்றும் அவர் வாழ்க்கையுடன் தொடர்பு கொண்ட இடங்களிலும் அவர் பல திருப்பணிகள் செய்து, விகாரங்கள் அமைத்து அளவிடற்கரிய தான தருமங்களையும் செய்தார்.