பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

திற்கு அசோகர் சென்றிருக்கையில், அவருடைய மகள் சாருமதியும் அவள் கணவன் தேவபாலனும் அவருடன் இருந்தனர். பின்னர் அவ்விருவரும் அங்கேயே தங்கிவிட்டனர். அங்கே அசோகர் அமைத்த நான்கு பழைய தூண்கள் உள்ளன.

தலைநகரான பாடலிபுரத்தில் அசோகர் கற்களால் புதிய அரண்மனை ஒன்றை அமைத்திருந்தார். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்திருந்த சீன யாத்திரிகர் பாஹியான் கற்களையெல்லாம் தேவதைகளே அடுக்கி வைத்து, சுவர்கள் எழுப்பி, சிற்பங்கள் செதுக்கி, அலங்காரங்கள் செய்து முடித்ததாகத் தாம் கேள்விப்பட்டதை எழுதி வைத்திருக்கிறார். மனிதர்களால் செய்ய முடியாத அளவில் மாட்சிமிகுந்த உயர்ந்த கட்டடங்களாகத் தோன்றியதால், அவர் அவ்வாறு நம்பி எழுதினார் போலும். அவருக்குப் பின் 200 ஆண்டுகள் கழித்து வந்த ஹுவான்சாங் காலத்தில் அரண்மனையும், நகரமுமே இடிந்து விழுந்து பாழடைந்திருந்ததாகக் குறித்திருக்கிறார். பாட்னா நகரைச் சுற்றிப் புதைபொருள் ஆராய்ச்சி செய்வதற்காகப் பல இடங்கள் தோண்டிப் பார்க்கப்பட்டுள்ளன. இன்னும் பெரும் பொருள் செலவு செய்து திட்டமான முறையில் தோண்டிப் பார்த்தால், பழைய பாடலியைப் பற்றியும், அசோகர் ஆட்சி பற்றியும் விளக்கம் பெறக்கூடிய பல பொருள்கள் அகப்படக் கூடும். அசோகர் அமைத்த கட்டடங்களும், விகாரங்களும் கால வெள்ளத்தில் சிதைந்தவை தவிர, பின்னர்ப் படையெடுத்து வந்த வெள்ளை ஹூணர்களாலும் அழிக்கப்பட்டன.