பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

மனிதர்கள் இப்பொழுது கலந்து உறவாடுகிறர்கள்’ என்று அவர் பொறித்திருக்கிறார். அசோகர் தாம் தருமப் பிரசாரத்தில் தீவிரமாக முயற்சி செய்த பின், மக்கள் தங்கள் சமயங்களில் மிக்க அக்கறை கொண்டுள்ளனர் என்று கருதியதையே இது குறிப்பிடுவதாக இருக்கலாம். அடுத்தாற் போல், ' இஃது என் முயற்சியின் பயன். இது சால்பு நிறைந்த பெரியோர்களுக்கே கை கூடும் என்று கருதுவது சரியில்லை. ஏனெனில், சாதாரண மனிதரும் முயற்சியின் மூலம் சுவர்க்க இலட்சியத்தை அடைய முடியும்' என்று அக் கல்வெட்டிலேயே காணப்படுகின்றது. ஆகவே, அசோகர் விரும்பியது முயற்சி-இடைவிடாத முயற்சி-என்றே தெரிகின்றது. இதிலிருந்து அவரால் வெறுக்கப்பட்டவை எவையென்றும் கண்டு கொள்ளலாம். ஒழுக்கம், சமயம் முதலியவற்றில் அக்கறையில்லாமை, எதையும் பின்னர்ப் பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளி வைத்தல், மறதி, சோம்பல், மிக்க தூக்கம் ஆகியவற்றை விலக்கினால் ஒழிய அவர் கருதிய ஆர்வம், அக்கறை, முயற்சி ஆகியவை தோன்ற முடியாது.

'நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்’

என்றார் திருவள்ளுவர்.

இதுவரை கிடைத்துள்ள அசோகருடைய கல்வெட்டுக்களுக்குப் பல மொழிபெயர்ப்புக்களும் தனி நூல்களும் வெளிவந்துள்ளன. அவற்றையெல்லாம் படித்துப் பார்த்தால், அவர் எடுத்துக் கூறியுள்ள சகிப்புத்தன்மை, சமரசத்தோடு