பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

83

பொருந்தியிருத்தல், அமைதி, அறத்தின் வெற்றி (தரும விஜயம்) ஆகியவை எக்காலத்திற்கும் தேவையானவை என்பது தெற்றென விளங்கும். அன்றியும் அவர் காலத்தில் நம் நாட்டில் பலப்பல சமயங்கள், கொள்கைகள், தத்துவஞான நூல்கள் ஆகியவை ஒன்றோடு ஒன்று போட்டியிட்டுக் கொண்டிருந்ததால், அடிப்படையான சமரச மனப்பான்மை ஏற்படுவதற்காக அவர் அரும்பாடுபட்டு வந்தார். சமரசத்தின் மூலம் நெருங்கிய உறவுகள் தோன்றி, மக்கட் சமூகம் ஓர் இனமாக வளர்வதற்கு அவரது வழி உதவியாயிற்று. மேலும், இந்தியா போன்ற ஒரு பரந்த பெருநாட்டில், மக்கள் இனங்களை ஒன்று சேர்த்து, மாநிலங்களிலும், மத்தியிலும் ஓர் ஆட்சி நிலைத்து நிற்பதற்கும் மூலமாக உதவக் கூடிய ஒரு செயல் இன்றியமையாதது. அந்தச் செயலை அசோகர் தமது தருமத்தின் மூலமே அமைத்துக் கொண்டார்.

கல்வெட்டுக்கள் 'மாகதி' என்று சொல்லப் பெறும் மகத நாட்டு மொழியில் உள்ளவை. அம் மொழியைப் பிராகிருதம் என்றும் சொல்லுவர். அவற்றிலுள்ள வாக்கியங்கள் அலங்காரங்கள் இல்லாமல், சாதாரண மக்களின் பேச்சுப் போலவே உள்ளன. இவற்றைக் கொண்டு, அவை அசோகப் பேரரசரின் திருவாயிலிருந்து நேராக வந்த சொற்கள் என்றும், அவற்றை வேறு எவரும் திருத்தவோ, மாற்றவோ துணிந்திருக்க முடியாது என்றும் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் ஒருவர் கூறியுள்ளார்.