பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

85

யிரம் பக்கங்கள் கொண்ட நூல்களாக அச்சிட்டு வைக்கப்பெறவில்லை; என்றாலும், அக்காலத்திலும் சட்டங்கள் இருந்தன. பல சமயத்தார்களும், சாதியார்களும், பல பிரதேச மக்களும் தொன்று தொட்டுப் பின்பற்றி வந்த பழக்க வழக்கங்களைக் கொண்டே சட்டங்கள் நிர்ணயிக்கப் பெற்றன. தருமம் பற்றியும், ஒழுக்கம் பற்றியும் பொதுவான விதிகளும் இருந்தன. இவற்றையெல்லாம் பேரரசர் தம் விருப்பப்படி, நினைத்தபோது தூக்கி எறிந்து விட முடியாது. மிகுந்த திறமையும், கல்வியும், கேள்வியும், நீதியும், மதிநுட்பமும் வாய்ந்த மந்திரிகளையும் எப்பொழுதும் புறக்கணித்துக் கொண்டிருக்க முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவில் ஒரு மத்திய அரசாங்கம் ஏற்படுவதற்கு முன்னர், கிராமங்களும் நகரங்களும் காரியங்களைப் பெரும்பாலும் தாமே நிறைவேற்றிக் கொண்டிருந்தன. ஓரளவில் அவற்றைக் குட்டிக் குடியரசுகள் எனலாம். அந்த நிலையில் பேரரசரின் அதிகாரம் ஒரு கட்டுக்குள் அடங்கியதே என்று சொல்ல வேண்டும். அதிலும் அசோகர் தாமாகவே தமக்கென்று மேலும் பல கட்டுப்பாடுகளை அமைத்துக்கொண்டார் என்பதை அவருடைய ஆணைகளிலிருந்து தெரிந்துள்ளோம். உண்ணும் பொழுதும், உறங்கும் பொழுதும்கூட அரசாங்கக் காரியங்களுக்காகத் தம்மிடம் எவரும் வரலாம் என்று அவர் விதித்திருந்தார்.

இந்தியாவின் கிழக்குப் பகுதியில் தலைநகரான பாடலிபுத்திரத்தில் இருந்துகொண்டு மாபெரும் அரசை அசோகர் நெடுங்காலம் ஆளமுடிந்தது