பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

இருந்தனர். அவருக்கு ஆலோசனை கூறுவதற்குப் 'பரிஷத்' என்று வழங்கப்பெறும் அமைச்சர் அவையும் இருந்தது. அவ்வவையில் எத்தனை அமைச்சர் இருந்தனர் என்பது தெரியவில்லை. பிந்துசாரர் காலத்தில் 500 அமைச்சர் இருந்தனராம்.

இராணுவத்தில், வழக்கம்போல், தேர்கள், யானைகள், குதிரைகள், காலாட்களைக் கொண்ட நால்வகைப் படைகளும் இருந்தன. தேவைப்படும் போது போர்ப்பயிற்சி யுள்ளவர்களைப் படையாகச் சேர்த்துக் கொள்ளும் முறையின்றி, நிலையாக ஊதியம் கொடுத்துப் பெரும்படைகள் வைக்கப் பெற்றிருந்தன. ஆறுகளில் சென்று வந்த ஓடங்கள், கப்பல்களுடன், கடலில் செல்லும் பல கப்பல்களும் இருந்தன. போர் அலுவலகம் முப்பது பேர்களைக் கொண்ட ஒரு சபையால் நிருவகிக்கப் பெற்று வந்தது. யவன ஆசிரியர்கள் எழுதியுள்ள வரலாறுகளிலிருந்து படை வீரர் பயன்படுத்திய ஆயுதங்களையும், தேர்கள் போர்களிலே செலுத்தப்பட்ட முறைகளையும், சாதாரணமாகச் சாலைகளிலே மாடுகளால் இழுத்துச் செல்லப்பட்டதையும் காண முடிகின்றது.

ஆனால், அசோகரோ, கலிங்கப் போருக்குப் பின்னர் ஒரே ஆணையில் போரையே ஒழித்துவிட்டார். போர் முழக்கமே மீண்டும் கேட்காதபடி அவர் தடைசெய்து விட்டார். எங்கும் தரும பேரிகையின் முழக்கமே கேட்கவேண்டும் என்பது அவர் கட்டளையாகிவிட்டது.