பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

அதிகரித்தன. உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை அரசாங்கம் தணிக்கை செய்ததுடன், உடனுக்குடன் பார்வையிட்ட சரக்குகளின்மீது முத்திரையிட்டு விற்பனைக்கும் அனுப்பி வந்தது. விலை வாசிகளும், வணிகருக்குரிய இலாபங்களும் அவ்வப்போது வகுக்கப்பெற்றன. அளவுக்குமேல் வணிகர்கள் பெற்ற ஆதாயங்கள் அரசாங்கத்திற்கு உரியவை. வாணிகத்திற்கான சட்ட திட்டங்கள் நுணுக்கமாக ஆராய்ந்து முடிவு செய்யப்பட்டன.

உலோகங்களின் பயன்கள் அக்காலத்தில் பெருகியிருந்தன. பய னு ள் ள பொருள்கள் செய்வதற்கு இரும்பும், செம்பும், ஈயமும் பயன்படுத்தப் பெற்றன. நகைகள் முதலியவற்றிற்காகவும், சேமித்துவைக்கவும் தங்கமும் வெள்ளியும் புழக்கத்தில் இருந்தன.

சந்திரகுப்தர் காலத்தில் இந்தியாவில் சாதிகள் தொழில்களின் அடிப்படையில் அமைந்திருந்ததால், அவை நீடித்து நின்றன. புத்தர் காலத்தில் சாதிகளின் கொடுமை குறைந்திருக்கலாம். பெளத்தர்களில் சாதி வேற்றுமை இல்லை. அசோகர் காலத்தில் அவர், பிராணிகளை வதைத்து, யாகங்கள் செய்தல் முதலியவற்றைத் தடை செய்தார். ஒழுக்கமும் தருமமும் வளர வேண்டுவதே இன்றியமையாதது என்று அவர் கருதினார்.

இந்தியாவில், யவன நாட்டைப் போல அடிமைகளை விற்று, வாங்கி, வேலை வாங்கும் முறை இல்லை என யவன ஆசிரியர்கள் கூறியுள்ளார்கள்.