பக்கம்:அலைகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆண்டாளு O 109

 பயம் என்று ஒன்று இருந்ததாகவே தெரியவில்லை. அந்தச் சிரிப்பில் அவன் உணர்ந்த ஏளனம், உடல்மேல் கம்பளிப் பூச்சிபோல் முலுமுலுவெனப் பிடுங்கிற்று.

ஒரு சமயம் அவனும், சுசியும் கடைக்கோ, சினிமாவுக்கோ, தெரிந்த வீட்டுக்கோ போய்விட்டுத் திரும்புவதற்குள் ஆண்டாளு, தானே சமையலறையில் புகுந்து, பற்றுப் பாத்திரங்களை ஒழித்துப் போட்டு, தேய்த்துத் துடைத்து, பலகைகளில் கவிழ்த்து அடுக்கி, ஒரு சாதமும் சின்னப் பாத்திரத்தில் குழம்பும் பண்ணித் தனியாய் வைத்து, அடுப்பையும் சாணியிட்டு மெழுகிக் கோலம் போட்டு விட்டாள்.

சுசிக்கே கொஞ்சம் 'திக்'காகிவிட்டது. சுசியின் முகத்தைப் பார்த்துப் பஞ்சாமிக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

‘உன்னை யாருடி ஆண்டாளு இதெல்லாம் செய்யச் சொன்னது. என்ன தான் எல்லாம் போச்சுன்னாலும் ஒரு இலை மறைவு தலை மறைவு. இடது கண் வலது கண்கூட இல்லாமல் போகணுமா?”

‘உன் பாசையெல்லாம் யாருக்குப் புரியுது? என்னவோ புள்ளத்தாச்சியாச்சேன்னு செஞ்சுட்டேன். ஏன், நான் தொட்டதை, நீங்க தொட்டுத்துன்னா, குடல் கறுத்துடுமா?”

அவளை என்ன செய்ய முடியும்?

தலையைச் சற்று சாய்த்தபடி குறும்பு கூத்தாடும் கண்களுடன் அவள், அவர்களைப் பார்க்கும் இச்சமயம், அவன் தன் கிராமத்து வாய்க்காலில் குளிக்கையில்-ஓடும் தண்ணிரில் சில சமயங்களில் பாசி, கும்பியோடு வேர் கழன்று பெரிய காதுகள் போன்ற இதழ்களுடன் மிதந்துவரும் வெள்ளைப் புஷ்பத்தை ஞாபகமூட்டினாள். அதன் பேர் என்ன? எங்கிருந்து வருகிறது, எங்கே போகிறது-யாருக்கும் தெரியாது. ஆனால், அதன் பெருமையான சிரிப்பு மாத்திரம் மனதில் பதிந்துவிட்டது. அம்மாதிரியே இவளுக்கு எப்பவும் எல்லாமே சிரிப்பு, ஏளனமாக இருந்ததோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/111&oldid=1288266" இலிருந்து மீள்விக்கப்பட்டது