பக்கம்:அலைகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110 O லா. ச ராமாமிருதம்

 சமயம் போதற்று உலகத்தையே ஒரு பெரும் சிரிப்பாய்க் கண்டு தன்னைக் கோபிப்பவரை மூர்க்கனாயும், முட்டாளாயுமாக்கும் ஒரு குழந்தைத் தன்மை, சூடிக்கொடுத்த நாச்சியார் இப்படித்தான் இருந்திருப்பாளோ?

ஊருக்குப் புறப்படுகையில் சுசி, ஆண்டாளிடம் தான் வீட்டை ஒப்படைத்துவிட்டுப் போனாள்.

”ஐயாவுக்குப் பொறுப்பு கிடையாது. நீதான் எல்லாத் தையும் கவனிச்சுக்கணும். அவர் ஒட்டல்லே சாப்பிடுவார். இரண்டு வேளையும் வந்து சாணி தெளிச்சிப் பெருக்கி...”

அவள் கிளம்பும்போது, ஆண்டாளு பச்சைக் குழந்தை மாதிரி அழுதாள், மனம் தாளாது. சுசியின் கண்ணீரும் கலந்தது. ”ஆண்டாளு என்மேல் இவ்வளவு பஷம் வெச்சிருக்கையாடி?” அழுகை ஒட்டுவாரொட்டி. அவனுக்கும் தொண்டை அடைத்தது. ஆனால், ஆண்டாளு இப்படி அழுகையிலேயே, அவள் கண்ணீரின் பாசனத்தில் புதுப் புதுச் சிரிப்புகள் அவளுள் பூத்துக் கொட்டிக் கொண்டிருந்தன என்று தோன்றாமல் இல்லை- வெடித்துவிட்ட அவுட்டு வாணம் இன்னும் சற்று நேரத்தில் பாளை பாளையாய்க் கக்கவிருக்கும் நக்ஷத்திரக் கூட்டங்கள்போல்.

ஒரு நாள் தற்செயலாக, கூடத்துக்கொடியில் பட்டுப் புடவை உலர்த்தியிருக்கக் கண்டான். எல்லா அரக்குச் சமத்துக்களின் தனி மறதிக்கு விலக்கில்லாமல், சுசி அதை மாத்திரம் உள்ளே வைக்க மறந்து ஊருக்குப் போய்விட்டாள்.”எலி பிடுங்காமல் அதை மடித்தாவது போடச் சொல்லணும்.”

தலை தீபாவளிக்கு எடுத்தது. பொன்வண்டுக் கலர்.

ஆனால், ஆண்டாளுவும், அவனும் அதிகமாய்ச் சந்திக்கக்கூட வாய்ப்பில்லை. சந்திக்கும்போது ஞாபகம் இருக்காது. வாசற் கதவு சாவி ஒன்று அவனிடம் இருந்தது. மற்றதை சுசி ஆண்டாளுவிடம் கொடுத்திருந்தாள். காலை-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/112&oldid=1288267" இலிருந்து மீள்விக்கப்பட்டது