பக்கம்:அலைகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124 O லா. ச. ராமாமிருதம்

 தன் ரகஸ்யத்தைப் பத்திரமாய் அடக்கிக் கொண்டு என்ன சிரிக்கிறது? நடுக்கடலில் விரித்த வலைபோல் இம்முடையலுள். சிந்தனையின் உருக் கூட நழுவும் என்ன என்ன எண்ணங்கள், ஏக்கங்கள், சீறல்கள், சிக்கித் தவிக்கின்றன? சன்னதியில் விரித்த இவ்வலை, ஏதோ ஒரு வகையில் உள்ளிருக்கும் மூர்த்தத்தையும் தன்னுள் வலித்ததோ?

இருந்தாற்போலிருந்து பார்வையின் எதேச்சையில், இழைகளின் சேர்க்கையில் ஒரு முகம் புனைந்து, கோலத்தின் அடைப்பினுள் பிரிந்து தனித்தது. சுவரில் கறைச் சாந்தில், வானத்தில் முகிற் குழைவில், உருப்பிதுங்கல்போல் கண்ணுக்குப் பட்டதென்னவோ, கன்னங்களின் கோடும், மோவாயின் உருட்டும்தான். மற்றதை உணர்வின் அடிவாரத்தில் புழுங்கும் இஷ்டம் இட்டு நிரப்பி, முகம் அடையாளம் கொண்டதும், அடிவயிற்றில் கண்ட பொறி திரியாகி, 'சுர்ர்ர்’ ரென்று நெஞ்சைத் துரத்தியடைந்து அங்கிருந்து பெரும் வீறலாய்க் கிளம்பிற்று.

"பா பூ!”

அலறியபின்தான் உணர்ந்தாள், தான் அலறியதை. நல்லவேளை, சன்னதியில் வேறு யாருமில்லை. முன்றானையை வாயில் திணித்துக் கொண்டாள். வெடிக்கவோ எரியவோ வழியடைத்துப் போன ஜ்வாலை, விழிவழி உடைந்து சரிந்தது.

“நீ இட்ட கோலத்தை அளிச்சு
அதை உன் நெஞ்சுலே எளுதவே வாரான்
இன்னோடு மாதம் அஞ்சுக்கு ரெண்டு
மகிழ்வாயம்மா கையில் ஏந்தி"

அண்டை வீட்டு, எதிர்வீட்டுச் சினேகிதிகள் காட்டினதால், அவர்கள் கட்டாயத்தில் தானும் நீட்டிய கைமேல் மந்திரக்கோலை வைத்து, மைதீட்டிய விழிகள் அவள் முகத்தைக் கவ்வ, மருள் கண்ட 'சோசியக்காரி’ சொன்ன சொல் பவித்த சுருக்கென்ன, பவித்த கனவு பொய்த்த சுருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/126&oldid=1288282" இலிருந்து மீள்விக்கப்பட்டது