பக்கம்:அலைகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாற்று O 129

வெற்றிலையைக் கடிச்சு முழுங்க உமக்குப் பல்லிருக்கா, பார்த்துக்குவம் வோய்!'

என்று நேருக்கு நேர் ஹெட்மாஸ்டரிடமே துளிர் மீசையை முள்ளாய்த் திருகும் பின்பெஞ்சு மைனர்கள் எல்லாம், ரங்கசாமி வாத்தியாரின் வகுப்பில் மகுடிப் பாம்பாய், வாயைப் பிளந்தபடிப் பாடம் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

இத்தனைக்கும் அவர் எந்தப் பையனையும் தொட்டது கூட இல்லை. யார் உடலும் தன்மேல் பட்டால் கூட அவருக்குப் பிடிக்காது, கூட்டங்களை அறவே விலக்குவார். சுள்ளென்று ஒரு வார்த்தை அவர் வாயிலிருந்து வந்ததில்லை .

சுவாமி தரிசனம் பண்ணிவிட்டு-- அர்த்தஜாம அடுக்கு தீபாராதனை பார்த்த பிறகுதான் ராச்சாப்பாடு - இந்த வழியாத்தான் வருவார்கள். முன்னாலே மாமா, அவர் நிழலை மிதிக்காமல், நிழலை ஒட்டினாற்போல், பின்னால் மாமி, இருசாரியிலும் திண்ணையில், குறட்டில், தெருவில் கயிற்றுக் கட்டிலில் பேசியபடி- காற்று வாங்குவோர்-- சின்னவா பெரியவா அத்தனை பேரும் வாயடைச்சுப்போய் எழுந்து நிற்பார்கள். அதையும் அவர் கண்டுக்கமாட்டார். அவர் பார்வை நேர் பார்வை; பாட்டை ராஜபாட்டை.

இப்பவும் கோவிலுக்குப் போறாளே, கை கோர்த்துண்டு போனால் தான் உலகத்தின் கவனம், ஒன்பதினாயிரம் 'காண்டில்பவர்' இவாள்மேல் விழும் என்று! நான் என்னவோ தேங்காய் பழம்தான் விற்கிறேன், ஆனால் இந்தத் தெருவரங்கில் நான் எத்தனையோ நாடகம் பார்த்தாச்சு. அக்ரமங்களைப் பார்த்துப் பார்த்தே மதில்மாதிரி சதையடைச்சுப்போன இந்தக் கண்ணோரத்தில் அத்தனை வருஷங்களுக்கடியில் எங்கோ ஒதுங்கி, மாமாவும், மாமியும் அர்த்த ஜாமத்திலிருந்து திரும்பிவரும் காட்சி, இப்போ நினைச்சுப் பார்த்தால் கூட குளுகுளுக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/131&oldid=1288287" இலிருந்து மீள்விக்கப்பட்டது