பக்கம்:அலைகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134 O லா. ச. ராமாமிருதம்

கைகட்டி அங்கங்கள் அனைத்தும் செவியாய்மாறி அப்பா நிற்பதும்-பார்த்தால்தான் உணரமுடியும். என் கேளாத கேள்விக்குப் பதில்போல், அட்ஷதையை என்மேல் தெளித்து தனக்கும் போட்டுக் கொள்வதுபோல் வாத்தியார் பத்னிடா” என்று சொனனதையே சொல்லிக்கொண்டிருப்பார்.

மாமா போனபின் மாமி கோவிலுக்குப் போவதில்லை. அவளை வீடு விழுங்கிவிட்டதோ என ஐயுறும்படி, வாசலில் கூடத் தென்படுவதில்லை. அவள் முகம்கூடச் சிலருக்கு மறந்து போயிருக்கும் என்றால் மிகையில்லை. காரணமாய் காரியமாய், கேட்க வேண்டியவர்களுக்கு மட்டும் குரல் கேட்கும். அவர்களுக்கு மாமி இன்னும் இருக்கிறாள் என்று தெரியும்.

வாசலில் சாணி தெளித்ததெப்போ? கோலமிட்டதெப்போ? யாரும் அறியமாட்டார். ஆனால் கோலத்தைப் பார்த்தவர்கள் யாரும் அங்கு ஒரு நிமிஷம் நின்று பார்த்துவிட்டுத் தான் நடப்பார்கள். ஒருநாள் போல் மறுநாள் இருக்காது.

சில விஷயங்களில் வருஷங்கள் கழிவது தெரிவதில்லை. அடிநாக்கில் ஊறுகாய் வண்டலை வைத்து இழுத்தாற் போல், ஏதோ ஒரு அடையாளம், அற்ப சம்பவத்தில், திடீரென்று ஒருநாள், “சுறீல்’ என்று உறைக்கிறது.

அதுமாதிரி, மாமி வாசலில் கோலம் திடீரென ஒருநாள் பெரிதாகி, தெருவையடைத்து, அதில் செம்மண் பளிச்சென்றது.

  • அங்கச்சிப் பாப்பாடா! கடிக்காதே!’ என்று சொல்லி வேப்பிலை மாமி என் வாயுள் திணித்த கற்கண்டை அடக்கியபடியே, நேற்றிரவு படுத்து, மறந்து, உறங்கிப் போய், இன்று காலை நாக்கில் தித்திப்புடனேயே எழுந்த மாதிரி இருக்கிறது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/136&oldid=1288524" இலிருந்து மீள்விக்கப்பட்டது