பக்கம்:அலைகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாற்று O 141



‘ஏன்டாப்பா, தமிழ்ப்பண்டிதர் வீடு இங்கேதான் எங்கோவாமே? எங்கேடாப்பா இருக்கு?’’

எனக்குக் குடலைக் குழப்பிற்று.

“என்ன மாமி, என்னைத் தெரியல்லியா?”

"இல்லையேடாப்பா தமிழ்பண்டிதராத்துக்கு வழி செல்லேன்!"

"என்னோடு வாங்கோ! நானே அழைச்சுண்டு போறேன்!”

அது கொஞ்சம் எட்ட நகர்ந்துகொண்டது. முகத்தில் தனிக் கபடு வீசிற்று.

"முன்னாலே நீ நட, நான் பின்னாலே வரேன்!’’

அப்பா வாசலில் நின்றிருந்தார். எங்களைக் கண்டதும் அவர் முகம் மாறிற்று.

“என்னப்பா, மாமி இப்படி ஆயிட்டா?’’

எனக்கு அழுகை வந்துவிட்டது.

அது அப்பாவை நெருங்கி-சந்தையில் மாட்டை நோட்டம் பார்ப்பது போல்-சுற்றி வந்தது. அப்பாவுக்கும் கண் துளும்பிற்று.

"ஆமா, நீயேதான்! ஏண்டா, நீதானேடா என் குழந்தையைக் கைப்பிடிச்சு தாரை வார்த்துக் கொடுத்தது?”

"நான் மஹா-ஆ-ஆ-பா-வி" - அப்பா விக்கி விக்கி அழுதார்.

"நம்பின வரை மோசம் பண்ணினவன் நீதானே?” குரல் கிறீச்சிட்டு, உச்சத்தில் உடைந்து, கண்ணாடிச் சுக்கலாய் உதிர்ந்தது. என் குழந்தையை எமனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்த கை இதுதானே?”

வீசிய வேகத்தில் அரிவாள்மணை உள்ளே, ரேழியில் போய் விழுந்தது.

"அம்மா! அம்மா! எங்கே போயிட்டே அம்மா?" - மாமியின் பையன் தேடிக்கொண்டு வந்துவிட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/143&oldid=1288531" இலிருந்து மீள்விக்கப்பட்டது