பக்கம்:அலைகள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணன் O 155

 என் அம்மா எங்கே? அம்மா எங்கே மாமா?

கொஞ்ச நாளைக்கு இதோ கொல்லைப்புறம் போயிருக்கா. இதோ எதிர்த்தாத்துக்குப் போயிருக்கா. இங்கே போயிருக்கா அங்கே போயிருக்கா’’ எல்லோரும் சாக்கு சொல்லி அப்புறம் கேக்கறதுக்கே பயமாயிருந்தது. நானும் கேக்கலே அவாளும் சொல்லல்லே. அம்மா போன இடம் தெரியல்லே. யாரும் சொல்லாமலே அம்மா இனி வரமாட்டான்னு தெரிஞ்சுபோச்சு. அப்புறம் கேக்கல்லே. தெருவில் போனால் ஒருத்தர் ரெண்டுபேர் “த்ஸோ, த்ஸோ’ங்கறா. ரெண்டுபேர் “சரிதான்; நாடோடி பயலுக்கு “த்ஸோ!’ என்ன வேண்டியிருக்கு’ என்கறா.

“குழந்தை என்ன பண்ணுவான்? பெத்தவா பாவம் அவா பெத்ததன் தலை மேலேங்கறது சரியாய்போச்சு .” இப்படி ஒரு பாட்டி சொல்றா. இப்போதான் நிஜமாப் பயமாயிருந்தது. இத்தனை பேர் என்னைச் சுற்றியிருந்தும் நடுக்காட்டில் தன்னந் தனியாய் விட்டு விட்டாற்போல் இருந்தது...... அம்மா சொல்வாளே ராஜகுமாரன் கதை, அது மாதிரி......

"அம்மா!-’’ என்றான் கண்ணன். ஒரே இருட்டு......

"அம்மா!"

அம்மா கிட்டதான் ராத்ரி படுக்கற வழக்கம், காலைத் துக்கி, அம்மா மடிமேலே போட்டுண்டா எவ்வளவு இதம் மாயிருக்கும்! தலைகாணியைவிட அம்மா தோள்தான் பஞ்சாட்டமிருக்கும். அம்மாவின் ஸ்ன்னமான மூச்சு, முகத்தில் பட்டுண்டே இருந்தால்தான் தைரியமாயிருக்கும்.

"அம்மா!" துக்கத்தின் இத்தனை நாள் ஊமையடி இன்றுதான் நெஞ்சு வீங்குகிறது.

"அம்மா!"

மலை மலையா மேகத்தின் நடுவிலிருந்து நிலா எட்டிப் பாக்கறது. என்ன ஆச்சர்யம் நிலா நடுவில் அம்மா முகம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/157&oldid=1288545" இலிருந்து மீள்விக்கப்பட்டது