பக்கம்:அலைகள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



166 O லா. ச. ராமாமிருதம்



நெஞ்சை வேறே நிரப்பறாங்க, உடம்பு கிடுகிடுன்னு ஆடுது. அண்டாவானாலும் கொண்டவரைக்கும் தானே!

வெறுப்பிலேயிருந்து தப்பிடலாம்.

எமன் கிட்டக்கூட ஒரு சமயம் இல்லாட்டி ஒரு சமயம்.

ஆனால் அன்பிலேருந்து, ஒடி ஒளிய திக்கில்லியா?

"என்னா சும்மா குந்திட்டிருக்கீங்க?”

பையன் என் மேலே வெச்ச முழிமாறவேயில்ல. என்ன அப்படிப் பார்த்துக்கிட்டிருக்கான்? லாந்தர்லே கண் சீதாப் பளி விரையாட்டம் பளபளக்குது.

சோறுமேலே சாம்பாரு சரிஞ்ச இடத்துலே, நெய் மினுக்கற பக்கம் பேத்து அப்படியே உருட்டி, அதுலே உருளைக் கிழங்கு பத்தை ஒண்ணு புதைச்சு பையன் கையிலே வெச்சேன். நமசிவாயம்.

பையன் முவத்துலே சந்தோசம் கண்ணுலே வழிஞ்சு, கன்னத்திலே குழிஞ்சு, உதட்டோரம் ஒளிஞ்சு விளையாடுதைப் பார்க்கணுமே பெரியவங்க ஒத்தரை யொத்தர் பார்த்துக்கறாங்க. அவங்க பார்த்துக்கிற அர்த்தம் என்ன? என்னாச்சும் இருந்துாட்டுப் போவட்டும். எனக்கு இனி வவுறு நோவாது இல்லியா?

ஆனால் ஒரு கவளம் காஞ்ச வவுத்துலே விளுந்ததுமே விக்கல் எடுத்துக்கிட்டுது. தொப்புள் சதை கொத்தோடு பிடுங்கிட்டு தொண்டைவரை வந்ததும் முழி மானத்தை முட்டுது. நொடியிலே மூச்சு மலையேறிப்போச்சு. மூக்குக்குக் குறுக்கே ஒரு பருக்கை தளமாட்டம் விளுந்துாட்டுது. பாம் பாட்டம் இருள் பின்னிக்கிட்டுது. அவங்க உரு அடையாளம் அழிஞ்சு குரங்காட்டம் மேலும் கீழும் குதிக்கிது.

“அப்பா! அப்பா!! அப்பா!!!" பையன்தான் துடிச்சுப் போயிட்டான். யாரோ தண்ணியை உதட்டண்டை ஏந்தறாங்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/168&oldid=1288555" இலிருந்து மீள்விக்கப்பட்டது