பக்கம்:அலைகள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188 O லா, ச. ராமாமிருதம்



நேருக்கு நேர் சொல்வதால், சொல்வது சமாதானமாகி விடுகிறது. என்னிடம் சமாதானம் இல்லை. சொன்னால் சமாதானம், சொல்லாமல் உள்ளுக்கே இருந்தால் உண்மை. உண்மையின் தன்மைக்கு நான் என்ன செய்ய?

ஆனால், வெளியிட முடியாவிட்டாலும், மனதிலாயினும் உனக்கு நாவில் வராத பாஷையில் நான் தெரிவித்தாகனும் .

நான் குற்றவாளியில்லை.

நான் களவாடவில்லை.

நான் களவு போனேன்.

அன்று மாலை, ஆபீஸிலிருந்து வந்ததும் நேரே மாடியேறி கட்டிலில் வீழ்ந்தபோது, நான் வேலையால் மாத்திரம் களைத்திருக்கவில்லை; துரையிடம் சொல்லடிப்பட்டு சோர்ந்திருந்தேன்.

அப்போது, என்னைத் தேடி நீ வருகையில், படிக்குப் படி கேட்டமெட்டியில், நான் உணர்ந்தது, என் மனதின் நோவிற்கு மன்தின்மேல் ஒலியின் ஒத்தடம்.

குறிப்பிட்ட வேளையில், அலை முகட்டிற்கு வந்து, வாய் திறந்து மழைத் துளிக்குக் காத்திருக்கும் சிப்பிகள் அதே போல் இன்னொரு வேளையில் ஒன்றன்பின் ஒன்றாய் தாமே தம் வயிறு திறந்துகொண்டாற்போல், ஓசை பங்கு பிரிந்து, ஒவ்வொரு ஸ்வரமும் தன்னிடத்தில்தான் மலர்ந்தாற்போல்- -

"ணக் ணக் ணக்.’’

என் நெஞ்சில் தெறித்தது வேளையின் முத்து.

என்மேல் கமழ்ந்தது வேளையின் மலர்ச்சி.

இது என் பாஷையில்லை. எனக்கே தெரிகின்றது. ஆனால் கவிதையே வேளை தன் முழுமை கண்டதன் விளைவுதானே!

வந்து என் நெற்றிமேல் கைவைத்தாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/190&oldid=1290268" இலிருந்து மீள்விக்கப்பட்டது