பக்கம்:அலைகள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190 O லா. ச. ராமாமிருதம்


"D--n" யார் பையன் இது?”

எங்கள் இருவருக்கும் ஒரே சமயத்தில் எழுந்த ஒரே எண்ணம் பொரிந்த ஒரே அலறலாய் இருவரும் ஒரு வாயில்:

"ரமணி ! ‘’

எனக்கு உடல் வெலவெலத்துவிட்டது. நாற்காலியிலிருந்து நான் எழ எழத் திரும்பத் திரும்பக் கீழே தள்ளிற்று, கண்கள் இருண்டுவிட்டன.

மாடிப்படியில் "திடுதிடு.”

“அப்பா! அப்பா!"

என் மடியில் பொத்தென்று ஏதோ விழுந்தது, பிறகு தான் உடலில் சுரணை மீண்டது. இன்னும் முற்றிலும் தெளியாத பார்வையில், என் கைகள் அவன் உடலில் இடமெல்லாம் தொட்டுத் தேடித் தவித்தன.

"அப்பா!"

மாரே வெடித்துவிடும்போல் குழந்தை விக்கி அழு கிறான்.

“ஐயோ ஐயோ! இதோ பாருங்களேன்! “

அவள் குரல் திடீரென ஏறிவிட்ட உச்சத்தில் தவித்து நூறு சுக்கல்களாய் உடைந்தது. ரமணியின் நிஜாரில் பட்டை பட்டையாய் ரத்தக் கறை. இன்னும் காயக்கூட இல்லை. நிஜார்ப் பையிலிருந்து தர்மாஸ் ப்ளாஸ்க் ப்ரஷ் அடர்த்தியாய், ஒரு வால் எட்டிப் பார்த்தது.

“ஐயோ! அம்மாடி!!’

இடுப்பைப் பிடித்துக்கொண்டு, குன்றினாற்போல் தரையில் உட்கார்ந்துவிட்டாள். அவள் விழிகள் பிதுங்கி, ஒரேயடியாய் விரிந்தன. முகத்தில் வேர்வை கொட்டிற்று.

சுடரின் சீறல்போல், வலியில் புத்தொளி பெற்றுப் பொலிந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/192&oldid=1290270" இலிருந்து மீள்விக்கப்பட்டது