பக்கம்:அலைகள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200 O லா. ச. ராமாமிருதம்


அப்பொழுதுதான் அவனுக்கு விஷயம் புலனாயிற்று-

பனிப் படலங்கள் சூழ்ந்த மலையுச்சியில் ஏறுகையில், திடீரென்று பனித்திரை கிழிந்து, தான் செங்குத்தான ஒரு பாறையோரத்தில் கீழே அகண்ட பாதாளத்துக்கு நேராக அடியெடுத்து ஒரு காலை ஆகாயத்தில் தூக்கியவண்ணம் நிற்பதைக் கண்டால் எப்படியிருக்குமோ, அப்படியிருந்தது அவனுக்கு!

தப்பியோடக் கூடத் தோன்றாமல், மனமும் உடலும் வெலவெலத்து விட்டன. அதற்குள் சேர்ந்தாற்போல் ஐம்பது கரங்கள் இரும்புப் பிடியாய் அவன்மேல் விழுந்தாற் போலிருத்தது.

அவனையுமறியாமல், இத்தனை நாள் சாப்பிடுவதற்கன்றி வேறெதற்கும் திறவாத அவன் வாய் திறந்து, ஜகன் மாதாவின் காதுக்கெட்டவோ என்னவோ, தொண்டை யைப் பீறிட்டுக்கொண்டு, ஒர் அலறல் எழுந்தது.

"ம்-மே- ஹே-ஹே-’’

இந்த உண்மையென்னும் உபயோகமற்ற தத்துவம் ஒன்றிருக்கிறதே. அது எப்பொழுதுமே பொய்யில்தான் புதைந்து கிடக்கிறது. அது வெளிப்படுவதற்கு வேளையோ நேரமோ கிடையாது. அதன் பலனை அனுபவிக்க முடியாத வேளையில்தான் அது புலனாகிறது.

இத்தனை நாளும், தான் சோமசன்மா எனும் பிராமணனாயிருந்ததெல்லாம் போய், கடைசியில் தான் கேவலம், பூர்வஜன்ம வாசனை முற்றிலும் விலகாத ஒர் ஆட்டு ஜன்மமே என்று அப்பொழுதுதான் தெரிந்தது.

அப்பவே வெட்டும் கழுத்தில் விழுந்தது.

☐☐☐
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/202&oldid=1290281" இலிருந்து மீள்விக்கப்பட்டது