பக்கம்:அலைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தபஸ் இ


'கிளுக்’ யாரோ சிரிக்கிறார்கள்.

இப்பூக்களா சிரிக்கின்றன? உற்று நோக்கினேன். யாரோ ஒடும் சப்தம். ஒரு கூந்தல் தலைதெரிந்தது. எடுத்துக்கட்டிய பின்னலில் சிவப்பு ரிப்பன் துருத்திக் கொண்டு நின்றது.

பின்னாலேயே ஒரு கிராப்புத் தலை.

நான் இன்னமும் முகத்தைப் பார்க்க முடியவில்லை. செடிகள் மறைத்தன.

ஒருகண நேரம் ஒரு பூவின் அடித்தண்டில், ஒரு கரம் தயங்கி நின்றது. ஆண் கரம். மறுகணம் கரமும் பூவும் மறைந்தன.

கூந்தலைக் கிராப்பு துரத்தியது. இருவர் சிரிப்பும் என் நெஞ்சைச் சுறீலெனச் சுட்டது.

எடுத்துக் கட்டிய பின்னலில், துருத்திக்கொண்டிருக்கும் சிவப்பு ரிப்பனை ஒட்டினாற்போல், கொய்த பூ ஏறுவதைக் கண்டேன். அம்பாளின் பூ...

தீபாராதனைக்குக் கோவில் மணி அடிக்க ஆரம்பித்து: விட்டது.

***

நான் ஒன்று மூன்றானேன்.

என் கைகள், என் கண்கள், நான்.

என் கைகள் தீபங்களை எடுத்துத் தேவிக்குக் காட்டுகின்றன.

என் கண்கள் குழுமியிருக்கும் கூட்டத்தில் அவ்விருவரையும் தேடுகின்றன.

நான் என்னிடம் இருக்கிறேன்.

அவர்கள் சற்று நேரம் பொறுத்து வந்தார்கள். இன்னமும் இருவர் முகத்திலும் சிரிப்பு. ஒரு சிறு கள்ளத்தனம், பெண்கள் நிற்கும் பக்கமாய் அவள் போய்ச் சேர்ந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/21&oldid=1123389" இலிருந்து மீள்விக்கப்பட்டது