பக்கம்:அலைகள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214 O லா. ச. ராமாமிருதம்



உண்மையில் அம்மா என்னைச் சலித்துக் கொள்ளவில்லை. அம்மாவின் பாஷை என்னவென்று எனக்குத் தெரியும். அம்மா அப்பாவை விலாவில் குத்துகிறாள். அப்பா உருட்டிவிட்டாற் போலிருந்த நாள், நடந்தால் பெருச்சாளி ஒடுவதுபோல் இருந்த நாள் எனக்குத் தெரியும், அப்பாவை இப்போ X-ரே எடுக்க வேண்டிய அவசியமேயில்லை. இப்போது விலாவெலும்புக்குள் 'ராக் ராக்' காய் முண்டி நிற்கின்றன. அந்த நாளில் தைத்த சட்டைகள் அவர்மீது இப்போ 'லாலிபீலி' யாய்த் தொங்குகின்றன. ஆனால் அம்மாவுக்கு இரக்கமில்லே. அம்மாவின் மறையடி சொல்குத்து அப்பாவின் விலாவில் 'சதக்' கென்று இறங்குவது எனக்குத் தெரிகிறது. கேட்கிறது என்றுகூட சொல்வேன். அந்த ஊமைவலியில் அப்பாவுக்கு மூச்சு கொக்கி வாங்குவதும் தெரிகிறது.

"பிள்ளையைச் சொல்லப் போய்விட்டாயே. நீ என்ன வாழ்ந்தாய்?" என்றுதான் அம்மா சொல்லாமல் கேட்கிறாள். இந்த வீட்டில் நுழையும்போது என்னோடு கொண்டு வந்த பிறந்த வீட்டு சொத்து. கொஞ்சமாய்க் கொண்டு வந்தேனா? அத்தனையும்,

“பஸ் ஸர்வீஸ் ஒட்டறேன்"

"பால் பண்ணை வைக்கிறேன்."

"Share மார்க்கட்டில் விளையாடறேன்"

“பிஸினேஸ் பண்ணறேன்"

(அம்மாவின் உச்சரிப்பின் கொச்சையில் சிந்தும் கேலியையும் வைரத்தையும் என் ஒசையில் கொண்டுவர முடிய வில்லை) என்று அழிச்சது யார்? யாரிடத்திலும் ஏமாறாதவாள் வண்டவாளம் எல்லாம் எனக்குத் தெரியாதா என்ன?" என்று பளிச்சென்று கேட்காமலே இடிக்கிறாள். பாவம், அப்பாவின் உடல் குன்றுவதைப் பார்த்தால் பரிதாபமாயிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/216&oldid=1285554" இலிருந்து மீள்விக்கப்பட்டது