பக்கம்:அலைகள்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
20 இ லா.சா.ரமாமிருதம்
 


கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு முன்னால் வந்து அவன் நின்றான், கைகளை வெகு பக்தியுடன் கட்டிக்கொண்டு.

அவனை என் கண்கள் நன்றாய்க் கவனிக்கின்றன. அவன் முக லக்ஷணங்களைத் தனித் தனியாய்ச் சோதிப்பதில் ஒருவிதமான ஆவலும் நேரிடுகின்றது. அச்சோதனை என் உள்ளத்தில் ஒரு புதுப் பொறியையும் வைக்கின்றது

அவனைப் பார்த்துவிட்டு அம்பாளை நோக்குகிறேன். அம்பாள் என் உடலில் ஒரு சக்தியைப் பாய்ச்சுகிற மாதிரி நான் உணர்கிறேன். என் மனப் பிராந்தியோ என்னவோ என் உடல் பரபரக்கிறது. என் உடல் தழல்போல சிவக்கிறது. அவளிடமிருந்து நான் ருத்ராம்சத்தைப் பெறுகையில், நான் தேஜோமயமாகி விடுகிறேன்.

நான் இப்பொழுது பீமன்.

வேறு உணர்ச்சிகளின் கலப்பற்ற சுத்தமான கோபாவேசத்திற்குள் நான் புகுகையில், அதுவே ஓர் ஆனந்தமாய்த் தான் இருக்கிறது; ஒரே பரவசம்...

தாம்பாளத்தையெடுத்துக்கொண்டு கர்ப்ப க்ருஹத்துள் நுழைகிறேன். மளமளவென்று தேவியின் நாம மந்திரங்கள் என் வாயினின்று கொட்டுகின்றன. கற்பூரத்தை ஏற்றிக் காண்பித்துவிட்டு, குங்குமத்தை இட்டுக் கொள்கிறேன். அப்படியே கூட்டத்தின் பக்கம் திரும்புகிறேன். என் உடலில் புதிதாய்க் கண்டிருக்கும் வெறி சஹிக்க முடியாத ஆனந்தமாயிருக்கிறது. அவனை என் கண்கள் தேடுகின்றன. அங்கு தான் நிற்கிறான், கையைக் கூப்பிக் கொண்டு கழுத்தை நீட்டிக்கொண்டு, பலி மாதிரி.

தாம்பாளத்தை வீசுகிறேன்...

நான் இப்பொழுது கிருஷ்ணன்.

சக்கரம்போல் சுழன்று கொண்டே போய் அது அவன் கழுத்தில் போய் இறங்குகிறது.

ரத்தம்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/22&oldid=1123393" இருந்து மீள்விக்கப்பட்டது