பக்கம்:அலைகள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அலைகள் O 219


அப்பா! அங்கச்சி எப்படியிருப்பாள் தெரியுமா? பச்சைப் பாலில் கடைந்த வெண்ணெய்போல் எப்பவும் புதிதாய், தள தளவென்றிருப்பாள். எப்பவும் குஷியாவேயிருப்பாள். ( "தின்னு தெறிச்சுட்டு வளைய வரது தவிர வேலை என்ன?" என்று அம்மா உரக்கவே கத்துவாள்.)

குழந்தைகளைத் தவிர, அம்மாவும் பெரியவர்களும் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து, அத்தை 'குறத்தி வேஷம் மார்வாடி வேஷம் பாருங்கோ!’ என்று பாவாடையணிந்து ரவிக்கை பொத்தான் நடுவில் மேலாக்கு நுனியை சொருகிக் கொண்டு தலைமேல் முக்காடு இட்டு நின்றால் அசல் அப்படியே தான்! அம்மாவின் சவுரியையும் திருடி, தளர்ப்பின்னிய கூந்தல், குஞ்சலத்துடன் டம்பங் கூத்தாடி சாட்டை போல் தரையிலிடிக்கும்:

வேஷத்தின் பாவனையில், அடியை மிடுக்காய் எடுத்து வைக்கையில் என் இதயத்தில் சதங்கை குலுங்கும். நான் சின்னப் பையன். இன்னும் உடையாத என் இளங்குரலில் கக்கடகடகடவென என் சிரிப்பைக் கேட்கக் கேட்க அவளுக்கு ஆனந்தம் பொங்கும். அப்படியே ஓடிவந்து என்னை வாரிக் கொள்வாள்.

"அத்தை 'நொன்னுன்னு தடவை, நொன்னுன்னு தடவை" என்று மழலையில் கொஞ்சுவேன்.

"அங்கச்சின்னு தான் அழையேன், அத்தையென்ன அத்தை, அவரைக்காய் சொத்தை! நான் என்னவோ நூத்துக் கிழவியாட்டமா!"

அத்தைக்குக் கல்யாணம் ஆகவில்லை. சீக்கிரம் வரன் குதிரவில்லை, இத்தனைக்கும் தோஷ ஜாதகம் கூட இல்லை.

“இவளைப் பார்க்க வரவாளுக்கு பஜ்ஜியும் ஸொஜ்ஜியும் பண்ணியே இந்தக் குடும்பம். பாழாப் போச்சு!” என்று அம்மா அலுத்துக்கொள்வாள். அம்மா எனக்குத் தான் அம்மா. ஒரோரு சமயம் அவள் பேசுவதைக் கேட்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/221&oldid=1285645" இலிருந்து மீள்விக்கப்பட்டது