பக்கம்:அலைகள்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242 O லா. ச. ராமாமிருதம்


கண்டதும், கண்டதுமே இழப்பது மட்டுமின்றி வேறு என்ன?

என் கையுள் ஒருகை சொப்புக் கை, நுழைந்து கட்டை விரலைக் கவ்விக் கொள்கிறது.

"அழாதே தாத்தா, நேக்குப் பயமாயிருக்கு என்னைத் தூக்கிக்கோயேன்!"

குனிந்து நோக்குகிறேன். என் கண்ணின் நீர்தாண்டி, ஸிந்து நிற்கிறாள்.

பாலுவின் கடைக்குட்டி, அவளை அப்படிக் காணும் அந்தச் சமயமே, இதுவரையில்லா என் நெஞ்சின் அடி இலைப் பழுப்புகளிடையே சலசலப்பு கேட்கிறது.

மறுபடியும் நெஞ்சடைப்பின் அடித்தகர்ப்பில் உள்ளத்தின் பெருந்தாவல். உடல் நரம்புகளை ஊடுருவும் உள் உணர்வின் 'பராக்!’

அவள் வந்துவிட்டாள்.

குழந்தையைத் தூக்கிக்கொள்கிறேன். இனி என்னை நடத்த, என்னைப் பிடித்த குஞ்சுக் கையைக் கண்களில் ஒத்திக் கொள்கிறேன்.

***

ஸிந்துவோடு பாலுவுக்கு அடுக்காய் ஆறு பெண்கள். ‘இந்த சமயம் பின்ளை'யென்று ஒவ்வொரு சமயமும் ஏமாந்து ஸிந்து பிறந்ததும், பாலு வெட்கங்கெட்டவன் பெட்டைப் பயல், கூடத்தில் புரண்டு புரண்டு அழுதான். பாலுவுக்கு ஸிந்துவைத் தந்த அவன் மனைவிமேல் கோபம். அவன் மனைவிக்கும் ஸிந்துமேல் அலுப்புத்தான் என்றா லும், ஸிந்து வந்த பின்தான் பாலுவுக்குப் பெருகிற்று.

ஸிந்து இப்போது என் உள்ளத்தின் படிதாண்டி அதன் பொட்டலைப் போக்கி, என்னைப் புதுப்பிக்கவே வந்து விட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/244&oldid=1286159" இலிருந்து மீள்விக்கப்பட்டது