பக்கம்:அலைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிரஹணம் O 25


கெக்கே’’ எனும் அவர்களின் சிரிப்புதான் அவர்களின் குலைந்த மானத்தை மறைக்க முயன்றது.

"என்னை விட்டுடுங்கோ-நான் கரையிலேயே வெறுமென தீர்த்தத்தைத் தெளித்துக் கொண்டு விடுகிறேன்-"

"பைத்தியம்... நாட்டுப்புறம்! இங்கே வந்து ரகளை பண்ணி மானத்தை வாங்கறது -’’

“நான் மாட்”

வார்த்தை முடியவில்லை. அதற்குள் ஒரு அலை அவள் மேல் இடிந்து விழுந்து விட்டது. வீல்” என்று தொண்டையினின்று எழுந்த வீறல் அப்படியே அமுங்கிப் போயிற்று. அலை வந்து விழுந்த வேகத்தில் அவள் கணவனின் பிடியினின்று அவளைப் பிடுங்கி, தன் வழியே அவளை இழுத்துக் கொண்டு போயிற்று.

அவளுக்கு எப்பவும் அச்சங்கலந்த ஒரு சந்தேகம் உண்டு. சாகுந்தறுவாயில் எப்படியிருக்கும்? அச்சமயம் மனம் எதை வேண்டும்? அவளுக்கு இப்பொழுது ஒன்றுதான் வேண்டும். மூச்சு.

அலை ஜலம் அவளை மேலும் கீழும் நாற்புறமும் சூழ்ந்து, வாய் கண் மூக்கிலேறி அமிழ்த்துகையில் அவள் வேண்டுவது மூச்சு-மூச்சு-மூச்சு-ஒரு நூலளவாயினும் மூச்சு:-அவள் தான் இறந்து போய் விட்டதாகவே நினைத்துக் கொண்டு விட்டாள். அலைகடந்து கலங்கிய அடி வண்டல் வெள்ளத்தில் அவள் கண்ணெதிரில் பல்லாயிரம் மணல்கள் பல்லாயிரம் உயிர் பெற்று நீந்தின.

செத்த பிறகும், ஒரு நூலளவு மூச்சுக்கு உயிர் ஊசலாடுமோ? கறுப்புக் கடிதாசுக் கூட்டுக்குள் எரியும் கைவிளக்குப் போல், சாவின் அந்தகாரத்துள் உள் நினைவிலிருந்து கொண்டு, ஒரு இழை-ஒரே இழை மூச்சுக்குத் தவிக்குமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/27&oldid=1285374" இலிருந்து மீள்விக்கப்பட்டது