பக்கம்:அலைகள்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதழ்கள் இ 273


மாத்திரம் அசையறது. அம்மா முகத்தில் லக்ஷ்மி களை அப்படி சோபிக்கிறது. அம்மா திடீர்னு சின்னப் பொண்ணாத் தோணறா, நான் பெத்துப்பெத்துக் கட்டுத் தளர்ந்து கிழவியாயிட்டேன். என் மனஸுலே என்னென்னெல்லாமோ படறுது .

கிழக்கு மேற்காகி, இடம் வலமாகி. நடக்கக் கூடாததெல்லாம் நடக்கக் கூடிய-ஏன், நடந்துண்டேயிருக்கிற ஒரு எல்லைக் கோட்டிலே நான் நிக்கற மாதிரி தோணறது. சே! என்ன இதெல்லாம்! நம் வாழ்க்கையிலே எவ்வளவோ அழகான நிமிஷங்கள் எத்தனை இருக்கு! அப்பவே மொக்கு கட்டி அப்பவே மலர்ந்து, அலரி, நெஞ்சின் நினைப்பிலே பட்ட மாத்திரத்திலேயே தீஞ்சு கருகிப்போற எத்தனையோ நிமிஷங்கள்! இப்படி நினைச்சுண்ட அந்த நிமிஷத்திலேயே நெஞ்சுக்குள்ளேயே ஒரு அழகான எண்ணம் பூக்கற மாதிரியிருக்கு. அந்த உணர்ச்சியிலே உடல் பரபரக்கிறது. ஆனந்தமாயிருக்கு! ஒரே பயமாயிருக்கு . தாங்க முடிய வில்லை. ஆவி, உடம்பிலேருந்து பறந்துடறாப் போலே சிட்டுக்குருவியா ரக்கையை அடிச்சுக்கறது.

ரெண்டு கையாலும் மார்பையழுத்திப் பிடிச்சுக்கறேன். கொஞ்சங் கொஞ்சமா என் பரபரப்பு அடங்கறது. புண்ணுலே தைலம் தடவினமாதிரி நெஞ்சுக்கு இதமாயிருக்கு. மனஸுகு திடீர்னு ஒரு காரணமுமில்லாமே உலகத்தோடே சமாதானமாயிருக்கணும்னு ஆசைப்படறது.

குழந்தைகள் விளையாடிட்டு திரும்பிவர சப்தம் வாசல்லே கேக்கறது.

ஸீமா குடுகுடுன்னு ஓடிவந்து மடியிலே விழறா. "அம்மா இதோ பாரு"ன்னு வாயைக் குதப்பிண்டே. என்னத்தையோ மூக்குக்கு நேரே நீட்டி நீட்டிக் காண்பிக்கிறாள். உதட்டோரத்தில் சாக்கலேட் பாகு வழியறது,

"யார் வாங்கிக் குடுத்தா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/275&oldid=1276511" இலிருந்து மீள்விக்கப்பட்டது