பக்கம்:அலைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிரஹணம் இ 27



போல் ஒழுங்காய் ஒதுக்கிய மீசையினடியில் சிரிப்பில் அகன்ற வாயில் பற்கள் வரிசையாய் ஒளி வீசின. அவன் சிரிக்கையில், உரமேறி அகன்ற வாய் நரம்புகள் இறுகி கன்னத்தில் குழி விழுந்தது.

அவன் பிடி உடும்புப் பிடியாயிருந்தது.

"என்னை விடுடா பாபி - "என்று கூவ வாயெடுத்தாள். அதற்குள் மறுபடியும் ஒரு அலை ஒரு வண்டி செங்கல் போல் அவள்மேல் சரிந்தது. அலை அவளை அழுத்தும் வேகத்தில், சமுத்திரத்தின் ஆழத்தையே அவள் அறிந்து விடுவாள் போலிருந்தது. கிணற்றுள் எறிந்த கல் போல் அவள் பாட்டுக்கு அழுந்திக்கொண்டே போனாள். ஆனால் அவளைப்பிடித்த கைமாத்திரம் பாதாளக் கொலுசு மாதிரி அவளை விடாது பிடித்துக் கொண்டிருந்தது. இதென்ன மாயமா மந்திரமா? அந்தக் கை, கடல் எவ்வளவு ஆழமாயினும் அவ்வளவு தூரம் நீளுமா?

தொண்டையில் முள்மாட்டிக் கொண்டபின், மீன் ஒட ஒட நீளும் தூண்டிற் கயிறுபோல், அத்தனை ஆழத்திற்கும் அந்தக் கை இடம் கொடுத்துக் கொண்டே போயிற்று. அவளால் தப்பவே முடியவில்லை. ஆனால் தப்பவேணும் எனும் எண்ணம் உண்டோ எனும் சங்கை அவளுள் அவளுக்கே எழுந்தது.

கிறு கிறுவென்று மனம் மாத்திரம் அவள் படும் அத்தனை அவஸ்தையிலும் அதிவேகமாய் வேலை செய்து கொண்டேயிருந்தது. மேன்மேலும் பழைய ஞாபகங்களும் புதிய நினைவுகளும், ஒன்றுக்கொன்று ஒவ்வாத எண்ணங்களும் விசித்திரமாய், அடுக்கடுக்காய்ப் படர்ந்து கொண்டே போயின. பலவர்ண நூல்கள் ஒன்றேறிய சிக்குப் போல் இருந்தது அவள் மனம்.

சாவு அவ்வளவு சுலப சாத்தியமாயில்லை. சாகத் துணிவெல்லாம் சமுத்திரக் கரை மட்டும் தான். சமுத்திரத்திலில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/29&oldid=1124973" இலிருந்து மீள்விக்கப்பட்டது