பக்கம்:அலைகள்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கிரஹணம் இ 29
 

 உலகத்தாருடன் ஒத்திருக்கலாம். தெய்வ பயமற்றிருக்கலாம். கணவன் கைபிடித்து ஸ்நானம் செய்து புண்ணியம் தேட வந்த இடத்தில், வேண்டியோ, வேண்டாமலோ பரன் கைபிடித்து ஸ்னாநம் பண்ணி நரகத்தைத் தேடிக் கொண்டிருந்தாலும், மனம் சிணுங்காதிருக்கலாம்.

என்னவிருந்தாலும் கிராமாந்தரத்திலிருந்து வந்தவளாதலால் தெய்வ பயம் மாத்திரம் அவளுக்கு உண்டு. அவள் கணவனை வெறுப்பதே அவளுக்கு பயமாயிருந்தது. நினைத்து நினைத்து மனம் புழுங்கினாள். மொத்தத்தில் நினைப்பு எனும் வினையே அலுப்பாயிருந்தது. கிராமத்தில் நினைக்க வேண்டிய காரியமே ஒன்றும் கிடையாது. எல்லாம் உணர்வுதான். காலையில் சாணி தெளிக்க எழுந்தது முதல், இரவில் மாட்டுக்கு வைக்கோலைப் போட்டுவிட்டு படுக்கும் வரை இடுப்பொடிய வேலை இருப்பினும் ஏதோ ஒரு மஹாபோதை வசப்பட்டவர்போல், அவரவர் ஒருவருக்கொருவர்கூட அதிகமாய் வார்த்தையாடாமல் அவரவர் ஜோலியில், அழுந்தியிருப்பர். அங்கு நினைப்பிற்கு நேரம் கிடையாது. ஆனால் இங்கு வந்த பிறகு தன்னினைவே தன்னைச் சுற்ற அதில் உழன்று அவள் தவித்தாள்.

அவள் மேல் விழுந்த அலை வடிந்து பின்வாங்க ஆரம் பித்து விட்டது. அதுவும்தான் அவளைக் காட்டிக் கொடுக்கப் போகிறது என்று அவளுக்குத் தெரியும். தலைமயிர் பிரிபிரியாய்த் தொங்க ஆடை உடலோடு ஒட்டிக்கொண்டு, இறக்கையும் சிறகும் பிய்த்தெறிந்த கோழிக் குஞ்சுபோல் அவலக்ஷணமாய், வெடவெட வென்று குளிரில் உதறிக் கொண்டு, தன்னைக் காணத் தனக்கே ஏற்படும் வெட்கத்திலும் வெறுப்பிலும் குன்றிப்போய் நின்றாள்.

அவன் கண்களில் இரக்கக்குறி ஏதும் காணோம். குறும்பு கலந்த வியப்பும், ஒரு அடிப்படையான ஆண் குரூரமும், பொறுமையற்றுச் சுளித்த ஒரு சிறு கோபமும்தான் தெரிந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/31&oldid=1126105" இருந்து மீள்விக்கப்பட்டது