பக்கம்:அலைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 லா. சா. ராமாமிருதம்


ஏற்படும் மனைவிக்கு மடியை விட்டு இப்போதுதான் ஒரு குழந்தை இரங்கிற்று, வாசலில் போய் மண்ணைத் தின்று கொண்டு விளையாட, இராத் தூக்கத்தை அழுது கெடுக்க, இடுப்பில் ஒரு குழந்தை. மனக்கவலை ஒயாதிருக்க, வயிற்றில் ஒரு வித்தோ என்று மூன்று மாதங்களாய்ச் சந்தேகம், இத்தனை பாரங்களைக் கழுத்திலே கட்டிக்கொண்டு, மேலே இறக்கையும் கட்டிக்கொண்டு பறப்பதென்றால், எப்படி முடியும்?

ஆகையால், இப்போது என்ன சொல்ல வந்தேன்? பஸ்ஸில் போய்க் கொண்டிருந்தேன்.

இந்தக் காலத்தில் பஸ்ஸில் போவதென்றால்தான், என்ன என்று தெரியுமே! ஒவ்வொரு வண்டியும் ஒரு மகாமக உற்சவம்-சினிமாக் கொட்டகையின் புதுப் படத்தின் முதல் நாள் கூட்டம். உள்ளே புகுவதே பிரயாசை-புகுந்து தோல் வாரைப் பிடித்துத் தொங்க இடம் கிடைப்பதே துர்லபம். உட்காரவே இடம் கிடைத்துவிட்டால்... அடேயப்பா!

நான் உட்கார்ந்து கொண்டிருந்தேன்.

“லொடக்-லெ டக்-லொடக்”

பஸ் ஓர் இடத்தில் நின்றது. வெளியிலிருந்து ஒரு கும்பல் அலைபோல் உள்ளே மோதியது. என் பக்கத்தில் ஒருத்தி வந்து உட்கார்ந்து நெறித்தாள் -நெளிந்தாள்.

நிறம் கறுப்பென்றே சொல்லலாம்? சிறிசு, பதினெட்டு, இருபது தானிருக்கும், காதில் 'பளிர், பளிர்' என்று சுடர் விடும் இரு வெள்ளைக்கல் 'டோலக்'குகள், கழுத்தில் ஸ்ன்னமாய் ஒரு தங்கச் சங்கிலி, நெருக்கமாய் நெய்யாத நீலப் புடவையில் சிவப்புக்கரை. குறுகுறு என்று முகத்தில் களை.

முறைத்துப் பார்க்கும் எண்ணத்துடனேயே, ஓர் ஆளை உன்னிப்பாய்ப் பார்க்கவேண்டிய அவசியமில்லை. கழுதை கூடத்தான் கோவில் சுவரை முறைத்துப் பார்த்துக்கொண்டு நிற்கிறது. அதனால் அது சிற்பங்களைப் பற்றிச் சிந்திக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/34&oldid=1284279" இலிருந்து மீள்விக்கப்பட்டது