பக்கம்:அலைகள்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
40 இ லா. ச. ராமாமிருதம்
 

 நிமிஷத்தின் நீட்டமே வருடங்கள் என்பதற்குச் சான்றென இங்கு நேரம் நின்ற இடத்திலேயே நிற்கின்றது.

ஸ்டேஷனுக்குப் பின்னால் ஒரே வரிசையில், இட வசதியில்லாத அதே மூன்று வீடுகள். ஒன்று அநேகமாய்ப் பூட்டியே கிடக்கும். மூன்றுக்கும் பொதுவாய் ஒரு கிணறு, இதைவிட உப்பான இடங்களிலிருந்து வந்த ஸ்டேஷன் மாஸ்டர் குடும்பங்களுக்கு இதன் ஜலம் கரும்பு!

கண்ணுக்கெட்டியவரை வயல் பரப்புகள் ஏரிக்கரை மீதினில் காவல் நிற்கும் பனை மரங்கள். அவைக்குமப்பால் எட்ட எட்ட நகர்ந்துகொண்டே சமயப்படி சிரிக்கும், சினக்கும், குமுறும் வான் விளிம்பு.

ஓரிரவு-

என்மேல் கைபட்டு விழித்துக்கொண்டேன். ஒருருவம் என்மேல் குனிந்தது. முகம்கூட நன்கு தெரியவில்லை. கும்மிருட்டு.

தவளைகளின் மூச்சுவிடாத பாட்டினிடையே அத்துடன் இழைந்தாற் போலேயே இன்னொரு சப்தமும் எழுந்தது.

"கூ-கூ-கூ-!”

என்னென்று புரியவில்லை. ஆனால் என் தலைமயிர் விறைத்தது.

"அம்பி, பயமாயிருக்கா? பயப்படாதே!" என் மார் மேல் அம்மாவின் கை விரல்கள் வெட வெடத்தன.

"என்னம்மா அது?’’

"யாரையோ இருட்டில் மடக்கிண்டு அடிக்கிறா." அம்மா எழுந்து சென்று சுவாமி விளக்கை ஏற்றி நமஸ்கரித்தாள். அவளுக்கு அப்பாவைப்பற்றிக் கவலை, அப்பா ஸ்டேஷனில் இருந்தார். நைட் டியூடி.

"கூ-கூ-!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/42&oldid=1126592" இருந்து மீள்விக்கப்பட்டது