பக்கம்:அலைகள்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
42 இ லா. ச. ராமாமிருதம்
 

 விடுமுறைக்கு வந்திருந்த அந்த நாளைக்கும் இன்றைக்கும் வித்யாசம் ஏதும் தெரியவில்லை. அன்றே இன்றையுமிருப்பின் இங்கு அது ஆச்சரியமில்லை. காலடியில் நீலமலர் சிரித்தது.

குனிந்து இதழ்களைத் தொட்டேன். பத்து வருடங்களுக்கு முன்னைய நெஞ்ச நெகிழ்ச்சியில், இதோ இதே இடத்தில் இதுமாதிரியே குனிந்து தொட்ட அதே மலர் தான்.

கம்பி வேலியுள் நுழைந்து தாண்டுகையில் காலையிடறும் அதே கல், மண்ணின் புதைவினின்று முண்டிற்று. ஒவ்வொரு தடவையும் அப்பா தலையிலடித்துக் கொள்வார்.

அப்பா போய் அவருக்குப்பின் வேண்டிய பேர் வந்து போய், உலகத்தின் உருண்டைக்கு இன்னொரு அத்தாட்சியாய் நானும் என் அப்பாவின் இடத்திற்கு இங்கு மீண்டாயிற்று. ஆனால் இதுவரை ஒருவருக்கேனும் அந்தக் கல்லைப் பெயர்த்தெடுக்கத் தோன்றியதில்லை.

வண்டி ஸ்டேஷனில் வந்து நின்று புகைந்துகொண்டிருந்தது.

‘கார்டு' பச்சைக் கொடியால் தொடை தட்டியபடி பொறுமையிழந்து நின்றார்.

“என்ன ஸார், ஒரு நாளைப் பார்த்தால்போல் வண்டி சமயத்துக்கு எங்கேயோ போயிடறீங்க! எழுதிப் போட்டுட வேண்டியதுதான்னு தோணுது! நீங்கள் எல்லாம் அனாவஸ்யமாயிருங்க. என் மண்டை உருண்டால் உங்களுக்கென்ன வந்தது?’’

வண்டி வளைவில் மறையும்வரை அதையே நின்று பார்த்துக் கொண்டிருந்தேன்.

நாள் முழுவதும் இங்கு இறங்குவோரையும் ஏறுவோரையும் ஒரு கையில் அஞ்சு விரலில் எண்ணிவிடலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/44&oldid=1127098" இருந்து மீள்விக்கப்பட்டது