பக்கம்:அலைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குண்டலி O 47



என்று நினைக்கப்படாது. Bright Boy! பர்ஸ்ட் பாரத்திலிருந்து மெரிட் ஸ்காலர்ஷிப்-”

எரிச்சலும் வெட்கமும் என்னைப் பிடுங்கித் தின்றன. வேப்பமரத்தின் பின்னால் ஒளிந்துகொள்ள முயன்றேன்.

எனக்கெதிரே 'பெண்களுக்கு மாத்திரம்' பெட்டி-நெருப்புப் பெட்டிபோல் சின்னப் பெட்டி-உள்ளே நாலு பேருக்குமேல் இல்லை. கதவைத் திறந்துகொண்டு மேலாக்கின் கொடுக்கு காற்றில் அலை மிதக்க வாசலில் வந்து அவள் நின்றாள். குண்டலங்கள்-

காலத்தின் உறைக்கல்லில் எல்லாம் தேய்ந்த பின்னர் அக்குண்டலங்கள் மாத்திரம் ஜ்வலிக்கின்றன. ஊன்றிய உள் நோக்கில் எல்லா அங்கங்களும் தன் பின்னணியில் மறைந்த இருளில், அவை மாத்திரம் குதித்துச் சுடர்விடுகின்றன. நடு வகிடினின்று வங்கி வங்கியாய்ச் சரிந்து இரு பக்கமும் தள தளத்த கூந்தல் பொத்திய செவிகளின் அடியிதழ்களில், புயலில் அலையும் ராந்தல்கள்போல், ஆடிச் சிரிக்கின்றன.

அவளைவிட அவைகளே அடையாளப் பதவியை அடைந்துவிட்டன.

எங்கள் கண்கள் சந்தித்தன.

ரயில் ஊதி நகர்ந்து, வேகமெடுக்க ஆரம்பித்தது.

என் பார்வையில் மறையும்வரை அங்கேயே நின்றிருந்தேன்.

அக்குண்டலங்கள் நினைவில் எங்கோ தைத்துக் கொண்டாலும் அவளைப்பற்றி நினைத்துக் கொண்டேயிருக்கப் போதுமான ஆதாரம் அப்போது நெஞ்சில் அழுந்தவில்லை. ரயிலில் எத்தனையோ பேர் வருகிறார்கள், போகிறார்கள்.

மறுநாள் அந்த வேளைக்கு அப்பா ஸ்னானம் பண்ணிக் கொண்டிருந்தமையால், கொடி காட்டவும் சாமான்களை வாங்கி வரவும் என்னை அனுப்பினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/49&oldid=1285681" இலிருந்து மீள்விக்கப்பட்டது