பக்கம்:அலைகள்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
48 இ லா. ச ராமாமிருதம்
 

 கார்டுடன் பேசிக் கொண்டிருக்கையில் பிடரியில் குறு குறுவெனும் உணர்ச்சி மீறித் திருப்பினேன்.

வண்டி வாசற்படியில், கல்லாலடித்தாற்போல் நேற்றைக்கும் இன்றைக்கும் வேறு இல்லாமல் அவள் நின்றிருந்தாள். தீர்க்கமான பார்வை என் கண்களைத் துருவின. எஃகுச் சுருள்கள் போன்ற மயிர் வளையங்களின் அடியில் குண்டலங்கள் ஆடிக் கன்னங்களை முத்தமிட்டன. அவைகளின் அடிச் சதங்கைகள் புலி நகங்களாய் நெஞ்சில் புதைந்தன.

வண்டி நகர்ந்தது.

மறையும்வரை அங்கேயே என்னைப் பார்த்தபடி நின்றிருந்தாள்.

ஸ்டேஷனின் வெறிச்சில், பொட்டலங்களை அணைத்தபடிப் பொறி கலங்கி நான் நின்றேன். ஒன்றிரண்டு நழுவிக் காலடியில் வீழ்ந்தன.

வயல்களில் கதிர்களில் பச்சை பளிச்சிட்டது. கதிர்ப் பச்சையின் வாஸனை எங்கிருந்தோ கம்மென்று கிளம்பி இலுப்பத் தோப்பிலிருந்து வரும் பூமணத்துடன் கலந்தது.

”ஒஹோய்!”

களத்துமேட்டிலிருந்து யாரோ யாரையோ கூவியழைக்கிறான். குரல், சுண்டின வெள்ளிபோல் எழும்பி ஆகாயத்தில் அந்தரத்தில் தனித்த நாதச் சொட்டாய்த் துளித்து வெற்றியோடு தொங்குகிறது. வேப்ப மரத்தடியில் பூக்கள் உதிர்ந்து ஜமக்காளம் நெய்திருக்கின்றன. வானில் ஒரு பட்சிக் கூட்டம் வியூகம் கட்டிப் பறந்து செல்கின்றது. அம்மா உலையில் அரிசி களைந்து இடுகையில் குறிப்பாய்ப் பாடும் துதி காற்றில் மிதந்து வந்து வாயில் கற்கண்டாய் தித்திக் கின்றது. கிணற்றடியின் சிமிட்டித் தரை, ஜலத்தில் நனைந்து சலவையாய்ப் பளபளக்கிறது. அப்பா அரைத் துண்டுடன், வாளிவாளியாய் இழுத்து மொண்டு மொண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/50&oldid=1135177" இருந்து மீள்விக்கப்பட்டது