பக்கம்:அலைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59 O லா. ச. ராமாமிருதம்

 உன் குண்டலங்களும் உருவும் உனக்கு நானிட்ட பேருமன்றி உன்னைப் பற்றி வேறெதும் கண்டிலேன். உன் குரலின் விதம்கூட எப்படி என்று அறியேன். ஆயினும் நெஞ்சில் தந்திகள் தாமே அலைந்து செவிதாண்டி , தசை தாண்டி எலும்பின், உள்சத்தில் அவை எழுப்பும் கீதத்தை உணர்கிறேன்.

நெஞ்சில் உன் உருவக் கோடுகளை விளம்பி விளம்பி நான் உன்னில் கண்டதை உள்ளபடி, என்னை ஏமாற்றிக் கொள்ளாது நினைப்பதிலேயே அமைதியும் அடைகிறேன்.

இவ்வமைதியே உனக்கும் எனக்குமிடையில் நான் கண்ட உண்மைக்கு ஒரு சாட்சியோ?

நான் கண்டதை உனக்குச் சொல்லும் பாவனையில் திரும்பத் திரும்ப எனக்குச் சொலிக்கொள்கிறேன்.

உடல் வாளிப்பின் பேரழகன்றி வேறில்லை. மூக்கு எடுப்பாய் ஆரம்பித்ததும், நுனிசற்று விண்டிருக்கிறது. உதடுகளின் வார்ப்பு செதுக்காயிருப்பினும் வாய் சற்றுப் பெரிது; கண்கள் பெரியன- ஆயினும் குழிவு.

நெற்றி ஆணினுடையதுபோல் அகன்று உயர்ந்திருக்கிறது. ஆயினும் இச் சிறுசிறு குறைகளிலிருந்தேதான் முகத்தில் உயிர் கூடச்சிந்துகிறது. அவைகளின் நிறைவை மனதின் ஊகத்திற்கு விட்டுவிட்டு முகம் களை கட்டுகிறது. கூடக் குண்டலங்களும் சேர்ந்த மொத்த விளைவு நெஞ்சு விளைவுடன் கலந்து நேர்ந்த ஊமை வலி, என்னை உள் தின்று கொண்டு, நான் என் உள் உள்பட வெறும் வெளிப் பொறுக்காய் நிற்கிறேன், உட்காருகிறேன், அலைகிறேன், துண்டால் மண்டையிலடித்த வண்டென என்னைச் சுற்றித் தட்டாமாலை வருகிறேன்.

தூரத்தில் ஒளி உதயமாகி, அதன் வட்டம் நெருங்க நெருங்கப் பெரிதாகிக்கொண்டே வருகிறது.

இதுதான் நீ வரவேண்டிய வண்டி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/52&oldid=1287241" இலிருந்து மீள்விக்கப்பட்டது