பக்கம்:அலைகள்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குண்டலி இ 51
 ஆனால் வண்டி இருப்புக் கிராதியின் எல்லையுள் கடக்கும் போதுதான் அறிகிறேன், இத்தொடருள் இரவில் உன்னைத் தேடுவது எவ்வளவு கடினம்! பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசமில்லையா? இரவில், ரயிலின் அவசரத்தில் இரவு காட்டும் நிழலில், அத்தனை முகங்களும் தனி முகமில்லா ஒரே முகம்தான்.

தோல்வியோ ஆவலோ, என் கைகள் பேரணைப்பில் விரிகின்றன.

இந்த வண்டித்தொடருள், எந்தப் பெட்டியுள் எந்த மூலையில் நீ புதைந்திருந்தாலும் சரி, நீ வந்திருந்தால் என் தழுவலுள் அடங்கவேணுமென்று இந்த ரயிலையே அணைக்கின்றேன்.

உன்னை அணைக்கநினைந்ததற்கு உன்னை மன்னிப்புக் கோரவில்லை. கோரினும், இன்றினும், நினைத்தது, நினைத்தவரை நினைத்ததுதான். ஒவ்வொரு எண்ணமும் ஒரு உயிர்த்தாது. நீ வெகுண்டினும் நான் அதற்கு மருண்டினும் அதை நசித்துவிடல் இயலாது.

ஆனால் உன்னை அணைக்க முடியவில்லை. நீ வந்திருந்தால் இந்த ரயிலில் வந்திருப்பாய் என்ற எண்ணத்திற்காக, உன்னைக் காணமுடியாததால் என் பார்வையை விசுவ திருஷ்டியாய்ப் பெருக்கிக் கொண்டாலும், என் அணைப்பு எவ்வளவு அகல விரிந்திடினும் என் கண்ணும் கையும் சூம்பித்தான் போகின்றன. விழியோரங்கள் உறுத்துகின்றன.

ஆயினும் கண்ணின்று வழியும் ஒரு ஒரு துளியும் ஒவ்வொரு சொட்டும் ஒவ்வொரு ப்ரளயத்தைத் தன்னுள் அடக்கிய வித்து.

கடைசிப் பெட்டியின் சிவப்பு விளக்கு என்னைப் பேரிருளில் ஆழ்த்திவிட்டு எட்டி மறைகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/53&oldid=1135188" இருந்து மீள்விக்கப்பட்டது