பக்கம்:அலைகள்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
60 இ லா. ச. ராமாமிருதம்'
 


மாய வீங்கிப்போன தன் கர்மாவைப் பின்தொடர்ந்து பிடித்துக் கணக்குத் தீர்ப்பதில் கவனத் திருப்பிக்கொன் டான். அவன் பெருமூச்சின் பெரும் புயலில் அது அடித்துக் கொண்டு போயிற்று.

லஷிய லஷணங்களாலாகியும் நிர்க்கதியாய்ப்போன அவ்விதயம் தன்னுருவைத் தானே தேடிக்கொள்ளும் நிலைமை அடைந்து அண்ட கோசங்களின் அகண்ட வேகமான கடையலில் முடங்கி அழுந்தி ஜனனப் பிரவாகத்தில் தானும் ஒரு முளையாய் முளைக்கத் துடிக்கும் வித்தாகி, விசும்பின் வழி திகிறி, பூமியில், ஆங்கு ஒர் அடவியில், ஓர் அருவியருகில், மர நிழலில், புற்றறையில், நாலு காலையும் நீட்டிப் படுத்து, புதுப் பிறப்பில் தவித்துக் கொண்டிருந்ததோர் காராம்பசுவின் கருவை அடைந்தது.

தன் கருவில் திடீரென நேர்ந்த புரட்சியை அத் தாய் உணர்ந்தது. புரியாத புது கனம் வயிற்றை அழுத்தியது. பசு வீறிட்டது. அந்நாபீ வீறல் காற்றில் மோதியது. ஆகாய வெளியில் கற்பகற்பங்களாய் மெளனாகாரத்தில் மிதந்து கொண்டிருக்கும் நாத பிந்துக்கள் உடைந்து எதிர் அலறின. மரங்களில் இலைகள் அசைவு தடுமாறி அடையாக நின்றன. பூமியும் அசை நின்று துவங்கியது. ஒரிரு மலைகள் எங்கோ நிலைகுலைந்து தலை கவிழ்ந்தன. பூகம்பம் உண்டாகியது.

இத்தனை கோலாகலத்துடன் அவ்வித்து உருவாகி, உயிராகி வெளிப்பட்டு, தாயை உதறிக்கொண்டு பூமியில் தானும் ஒரு தனியாகி விழுந்ததும், விழுந்த கன்றை, நக்கிக் கொடுக்கத் தாய்க்குச் சக்தியில்லை. ஆனால் ஈச்வரனுக்கு ப்ரீதியான அதன் பால், தாய்மையின் மஹிமையில், ஈச்வரனுக்கும் கிட்டாத இனிப்பைப் பெற்று மடிபுரண்டு, அருள் பெருகிப் புற்றறைமேல் பாய்ந்து, பச்சைப் புல் நுனிகளில் பால் துளிகள் முத்து மகுடங்கள் கட்டின. அருவிப் பாலாய் ஒடிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/62&oldid=1139073" இருந்து மீள்விக்கப்பட்டது