பக்கம்:அலைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66 O லா சா ராமாமிருதம்


ஜன்மேதிஜன்மமாய்த் துடிக்கும் மூலநாடி புடைத்தெழுந்த அதிர்ச்சி, தாங்கத்தக்கதாயில்லை. இப்படி இரண்டும் முகத்தோடு முகம் வைத்து கழுத்தோடு கழுத்து உராய்ந்து கொள்ளும் இந்தச் சைகையே ஒரு முத்திரையாய்த் தான் அமைந்தது . ஒன்றையொன்று அறியாமலே பிறந்து, வளர்ந்து இத்தனை நாட்களுக்குப் பின், ஒன்றுக்கொன்று தெரியாமலே ஒன்றையொன்று தேடிவந்து, இப்போது ஒன்றையொன்று சந்தித்துக்கொண்ட இயற்கையின் சத்திய ஏற்பாடின் முத்திரை. அந்த ஆதார சத்தியத்தின் உக்கிரம் காளையின் நாபியில் உறங்கிக் கிடந்தது, சுருள் கழன்று விழித்தெழுந்ததும், அதன் விழித்திறப்பில், அதன் நெற்றி நடுவில் மின்னல் கொடிகள் பின்னிப் பளிச்சிட்டன. ஒரு கணத்தின் யுகநேரம் மலையும் பாறைகளும் காற்றில் காற்றாடி மிதந்தன. காளை அதிர்ச்சியில் கண்கூசி கண் மூடிக் கொண்டது.

கண் திறந்ததும் காளை தான் அதைக் கண்டது. அது இன்னும் காளையைக் காணவில்லை. மலையடிவாரத்தில் ஒரு பாறையின் பின்னிலிருந்து அது வெளிப்பட்டது. அதைக் கண்டதும் காளைக்குத் திமில் சிலிர்த்தது.

விளம்பலற்ற ஒரே கோடில் எழும்பி வளைந்து முடிந்து, உயிராகி ஒரே லகுவிலும் லயத்திலுமே இழைத்த உடலில் கட்டுக் கட்டாய் வரிவரிக்கோடுகள் ஓடின. ஆறாத பசியில் நீண்டு குறுகிய வயிறு. தீராத கோபம் கொதித்துக் கொதித்து நீறு பூத்த தணல் விழிகள், எப்பவும் எதையோ தேடி அலைந்தன. அந்த ஓயாத தேடலில் அதன் மீசையும் வாலும் அசைந்தாடியபடியேயிருந்தன. இந்தப் புது தரிசனம் தன்னிலும் உரம் மிகுந்தது. அதன் வழியில் தன்னிலும் உயர்ந்தது என்று காளை தெளிவாய் அறியாவிடினும் திடமாய் உணர்ந்தது, அவ்வுருவம். எந்தப் பாறையின் மறைவிலிருந்து வெளிப்பட்டதோ, அந்தப் பாறையை ஒரு முறை தேடலில் சுற்றி வந்தது. அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/68&oldid=1287257" இலிருந்து மீள்விக்கப்பட்டது