பக்கம்:அலைகள்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆஹுதி இ 71
 


எனக்கு ஜன்மத்தைக் கொடுத்து, அதை வீணாயும் அடித்து, அதுவே காரணமாய் அதற்கு ஒரு தொடர்பை நீ ஏற்படுத்தி விட்டாலும், அந்த ஜன்ம ரீதியிலேயே நான் வளர்ந்து வளர்ந்து ஒரு சமயத்தில் உன் தேவையே இலாது உன்னிலும் பெரிதாகிவிடுவேன். ஆனால் நீயோ, நீ பிடித்துப் பிடித்துப் போட்ட மண்ணை அழித்து அழித்துப் பிசைந்து அதையே தின்று கொண்டிருப்பாய். இது விந்து விருஷத்திற்கு இடும் சாபம். வீண்போகாது வீண்போகாது-”

இடி குமுரி உடைந்தது. எங்கோ மரத்தில் ஒருகிளை மொளமொளவென முறிந்தது.

“நான்.”

"நான் யாரை இப்படி எதற்காகத் தூற்றுகிறேன்?”

வானம் வெட்கத்தில் உகுத்த கண்ணிர்போல், மழைத் துளிகள் காளை முகத்தில் ஒன்றும் இரண்டுமாய் உதிர்ந்தன. காளைக்கு நெஞ்சு இறைத்தது. கண்கள் நிலைக்குத்தி விட்டன. ஆனால் அது உருவான இதய பலத்தில் குற்றுயிரும் நினைவும் இன்னும் விடாது உடலோடு ஒட்டிக் கொண்டிருந்தன.

பொலபொலவென பொழுது புலரும் வேளையில் காளையின் கண்ணெதிர் உயரத்தில் திறந்தவாய் போன்ற இருபாறைகளின் இடைவளைவில், வானத்தின் செந்திட்டின் பின்னணியிலிருந்து சூரியனுக்கு முன்னால் அவ்வுருவம் உதயமாயிற்று. தன் திமிலின் சிலிர்ப்பிலேயே காளை அதை அடையாளம் கண்டு கொண்டது. அப்போதே அதுவும் அதைக் கண்டது. அதன் மீசை துடித்தது. அதன் உடல் ஒருகணம் பதுங்கலில் ஒடுங்கிக் குறுகிற்று. அவ்வளவுதான்.

காளையின் இதயம் நெஞ்சுவரை எழுந்தது.

மலையை உதைத்துக் கொண்டு எழும்பிய பாய்ச்சலில் வேகத்தில் திகிரிபோல் அந்தரத்தில் நீந்திக் கொண்டே அவ்வுருவம் நேரே மாட்டின்மேல் இறங்கிற்று. ஆனால் அதன் உடல் படுமுன் ரிஷபத்திற்கு இதயம் வெடித்துவிட்டது. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/73&oldid=1142467" இருந்து மீள்விக்கப்பட்டது