பக்கம்:அலைகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6



கடற்கரையில் வந்து மணலில் படுத்து அண்ணாந்து பார்க்கையில், என்மேல் தன் அலுக்காத ஒளி ஜாலங்களுடன் கவிந்த வான்கடலும், என் கைக்கெட்டிய தூரத்தில் என் எதிரே விரிந்த கடலும் இருக்க வேறென்ன வேண்டும் எனப் பலதரம் நினைத்ததுண்டு.

கரையிலிருப்பவனுக்கு தன்னெதிரே விரிந்த கடலைப் பற்றி அதிசயிப்பு.

கப்பலிலோ, கட்டு மரத்திலோ கடலில் இருப்பவனுக்கு தான் மீளக் கரை இருக்கிற தெம்பு.

தெய்வத்துக்கும் மனிதனுக்கும் உள்ள உறவின் பரஸ்பரமும் இதுதான் என்பது என் துணிபு.

வந்தேன்

பார்த்தேன்

ஜெயித்தேன்

இதை உலகில் உயிரின் யாத்திரையாகக் கொள்வோமா?

ஆனால், யாத்திரை முடிய வேண்டாமா?

முடிந்தால்தானே அது யாத்திரை!

ஜெயித்தேன்.

ஜெயித்த பின் எங்கிருந்து வந்தேனோ அங்கு மீண்டேன்.

இது உலகத்தின் கோளவடிவிற்கு ஒரு சான்றாய் நிற்பதோடு அல்லாமல் மனிதன் தெய்வமாகும் சரிதையும் அதுவே யாகும்.

இத்தொகுதியில் அடங்கியுள்ள கதைகள் என் எழுத்து அனுபவத்தில் இருபத்து மூன்று அல்லது இருபத்து நான்கு வருடங்களின் பார்வைகள். இவைகளைப் பற்றி இப்பொழுது எனக்கு எழும் உள்ளக் கிளர்ச்சியை நான் என்னென்று விவரிப்பேன்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/8&oldid=1298493" இலிருந்து மீள்விக்கப்பட்டது