பக்கம்:அலைகள்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

என் மகன் சேகர் என்னதான் சொல்லியும் கூடத்தில் துங்கிவிடுகிறான். ஒவ்வொரு தடவையும் அவனை எடுத்துச் சென்று படுக்கையில் துங்கச் செய்வது எனக்கு நேர்ந்துவிட்ட வேலை, அவன் இரண்டு நிஜார்ப்பைகளும் எக்கச்சக்கமாய் முண்டிக் கொண்டிருக்கின்றன. குழந்தை தூக்கத்தில் புரண்டால் நோகுமே என்று பைகளைக் காலி செய்கிறேன். பைகளிலிருந்து என்னென்னவோ கைக்குக் கிடைக்கிறது. கயிறு சுற்றிய பம்பரம், ஒமப்பொடியாய் உடைத்த சிலேட்டுக் குச்சிகள், ஆணிகள், கசங்கியும் கத்தரித்ததுமான காகிதத்துண்டுகள் வழவழவெனும் கூழாங்கல், பென்சிலில் திருகி எடுத்த விசிறிபோல் சுருண்ட சீவல் சரம், சோடாமூடி, கோலிக்குண்டு இன்னும் இம் மாதிரி ஏதேதோ!

மறுநாட்காலை குழந்தை எழுந்ததும் அவனுடைய சாமான்களைத் தான் முதலில் தேடுகிறான். அவைகளைக் காணாவிடில் அழுகிறான்.

அவன் துக்கத்தைக் காண எனக்குச் சிரிப்பு வருகிறது. அவன் அப்பொருள்களின்மேல் வைத்திருக்கும் ஆசையும், அருமையும் எனக்குத்தான் சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறது. ஆனால் நானும் ஒருநாள் சேகராக இருந்துதான் இப்பொழுது கிழவனாகிக் கொண்டிருப்பது எனக்கு ஏன் மறந்துவிட்டது? இப்படித் தோன்றியதும், என்னை சில சமயங்களில் என்னால் மன்னிக்க முடியவில்லை.

சேகரின் முதற் புனிதத்தை நான் இழந்து விட்டேன் எனும் இவ்வுணர்வே மெய்யுணர்வின் விடிவு.

இக்கதைகளைப் பொறுத்த வரை என் நிலையும் இப்படித்தான்.

ஒவ்வொரு உணர்ச்சியையும் தனித்துப் பார்க்கையில் ஆசைகள், கோபங்கள் பாசங்கள், ஆசாபாசங்கள், நிறைவுகள், குறைகள் என தனித்தனிக் கோணங்கள் தான் எழுகின்றன. ஆனால், அவ்வப்போது எது, எது எப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/9&oldid=1298489" இருந்து மீள்விக்கப்பட்டது