பக்கம்:அலைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96 O லா. ச. ராமாமிருதம்



அவரைச் சீண்டவோ, கையின் ஓயாத சேஷ்டையோ, கரையிலிருந்து ஒரு சிறு கல்லைப் பொறுக்கித் தாழச் சுழற்றிக் குளத்தில் எறிந்தேன். அது மூணு தடவை ஜலத் தகட்டின் மேல் தத்திச் சென்று உள்விழுந்தது.

“அவர் முகத்தில் சிரிப்பு இல்லை; அதன் முன்னொளி பரவியது; ஒரு கல்லை யெடுத்து வீசினார்.

"ஒண்னு-ரெண்டு-மூணு நாலு-அஞ்சு-கிளுக்!

"எனக்கு ரோஸம் வந்துவிட்டது. சரியான கல்லைத் தேடி என் கண்ணோட்டம் கரைமேல் பாய்ந்தது. அவரும் அவசர அவசரமாய் அவர் பக்கத்தில் தேடினார்.

-எப்படி நேர்ந்ததோ, இரண்டு கற்களும் ஒரே சமயத்தில் கிளம்பின.

"- ஒண்ணு-ரெண்டு-மூணு-'டனார்'-!' பொறிகள் பறந்தன.

"களி வெறியில் எனக்குச் சிரிப்புப் பீறிட்டது. வெற்றியுடன் எதிர்க்கரையை நோக்கினேன்.

“அவர் ஒரு கையால் மாரைப் பிடித்துக்கொண்டு கரை மேல் சாய்ந்து கிடந்தார். முகம் கடிதாசாய் வெளுத்து விட்டது. உள் வலியில் புருவங்கள் நெறிந்தன.

“குளத்தைச் சுற்றிக்கொண்டு அவரிடம் ஒடினேன். மூச்சுக்கு அவர் தவிக்கும் தவிப்பைக் கண்டு எனக்கும் துக்கமும் திகிலுமுமாய் அழுகை வந்துவிட்டது.

“என்ன உடம்பு? என்ன பண்றது?" பூச்சி பறப்பது போல், கைகளைப் பிசைந்துகொண்டு அவரைச் சுற்றிச் சுற்றி வந்தேன்.

"ஒண்ணுமில்லை". - குரல் அடைத்துக்கொண்டு வந்தது. ஜுரத்தின் கலங்கிய சிவப்பை அவர் முகம் அஸ்த மனத்திலிருந்து வாங்கிக் கொண்டதா? அல்லது அவரிடமிருந்துதான் அந்தச் சாயம் வானத்துக்கு ஏறிற்றா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/98&oldid=1288255" இலிருந்து மீள்விக்கப்பட்டது