பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கொலு ❖ 109


அவள் தயாராயிருந்தாலும், சுமைக்கு மனமில்லை போல், உடம்பைப் படுத்திக் கொண்டேயிருந்தது. மனமில்லாத கரு. பிரசவமும் கெடுபிடிதான். சிஸேரியன்.

ஆனால், குழந்தைப் பேறில், பெற்ற பின்தானே தெரிகிறது, இந்தப் பேறுக்கு இன்னும் எத்தனை வேணுமானாலும் படலாம். குழந்தையா அது? ஏதோ தெய்வப் பிறவி. இப்படி ஒர் அழகா? யார் ஜாடையாவுமில்லை. நாளடைவில், நினைவடியில் புதைந்துபோன எந்த முன்னோனோ?

தலைமயிர் அடையாய் நெற்றியில் விழுந்து, கண்ணை மறைத்தது. கண்கள் நீலக்கடல்கள். பிறந்தவுடன் எல்லாக் குழந்தைகளுமே சிவப்புத்தான். ஆனால் இது முழு ரோஸ். உடனேயே அழைச்சாச்சு. குலாப், என் அருமை குலாபீ!

உடல் ரத்தம் பூராவே அன்பாய் மாறிச் சுரந்த தாய்ப் பாலில் அந்த ஆறு மாதங்களுள் குழந்தை மொழு மொழு. பார்த்தவர் எல்லாரும் வாரிக்கொள்ளும்படி, தாங்கமுடியாத அந்த மொக்கு வாய் மோகனச் சிரிப்பு.

வியாழனும், ஞாயிறும் தவறாது, மாலை தாயின் மடியில், குழந்தையை உட்கார வைத்து, அம்மா சுற்றிப் போடுவாள்.

ஆனால் பிறந்த வீட்டில் உட்கார்ந்துண்டேயிருக்க முடியுமா? மனுஷன் எத்தனை நாள் ஒட்டலிலேயே சாப்பிட்டுண்டு இருப்பார்? அவளைக் குழந்தையுடன் வீட்டில் கொண்டுவந்து விட்டாச்சு. அம்மா ஊர் திரும்பியு மாச்சு. கையோடு நவராத்திரியும் வந்தாச்சு.

பாலாவுக்கு என்றுமே இது மாதிரி விஷயங்களில் ஆசை ஜாஸ்தி. இம்முறை அம்பாளே அவதாரமெடுத் திருக்கா, உத்ஸாகத்துக்குக் கேட்கணுமா?