பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 ❖ லா. ச. ராமாமிர்தம்

உடைந்த நாற்காலிகள், ஜாதிக்காய்ப் பலகைகள் எல்லாம் ஒண்ணுக்கொண்னு முட்டுக் கொடுத்துப் படியெழுப்பினால், அதுவும் ஒண்டியா-'பாப்ராஸ்'தான். ஒரு எலி உள்ளே ஓடினால் போதும் அடியோடு சரிய சாக்காச்சு.

காலத்தைப் போல் மருத்துவன் இல்லை, வாஸ்தவம் தான். ஆனால் அங்கே ஒரு வேடிக்கை-பின் வேறெப்படிச் சொல்வது? நோய் குணமானாலும் மருந்தின் கசப்பு விடுவதில்லை; தங்கி விடுகிறது. அது மாற மருந்தில்லை. அல்ல, அதுவேதான் மருந்தோ?

பெருமூச்செறிந்து, எழுந்து போய், ஜன்னல்களைத் திறந்தாள். காற்று 'சில்' என்று மோதி, நெற்றியை ஒற்றியது.

முன் நிலா மறைந்து விட்டது. இருட்டு, ஆங்காங்கே வீடுகளின் அடையாளமாய் 'மினுக் மினுக்'கோடு சரி. 'போஷ்' ஏரியாவில் இதுதான் ட்ரபிள். ஜன நடமாட்டம் சுருக்கவே அடங்கிவிடும். ஆனால் வீட்டுள், இரவைப் பகலாக்கும் வெளிச்சம் போட்டு, கொலு அமர்க்களப்படும். ஆம், பாட்டுச் சத்தம் கூடக் கேக்கறது.

“பிருந்தாவன நிலையே” எங்கிருந்தோ காற்றில் மிதந்து வருகிறது. ரீதி கெளளை. ஊத்துக்காடு கீர்த்தனை. அவளுக்கு அவர் பாட்டில் நாலஞ்சு பாடம் உண்டு. பாட்டு வாத்தியார் வெச்சுப் பாட்டுக் கத்துண்டவளாச்சே!

உடனே இன்னொரு நினைவு வந்து, உடம்பு பரபரத்துப் போச்சு. 'விர்'ரென்று மாடியேறிப் போய், அறையுள் நுழைந்தாள். விளக்கு இல்லை.

“தூங்கிட்டேளா?”

“இல்லியே! ஸ்விட்சைப் போடு.”

“வெளிச்சம் வேண்டாம்.” கட்டிலண்டை வந்து தரையில் அமர்ந்தாள்.