பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118 ❖ லா. ச. ராமாமிர்தம்


உலாத்தினாப்போல், துல்லியமாய், லேசாய், குளுமை வழிந்து நிறைந்திருந்தது.

கைகளைக் கோர்த்து, தலைக்கு வைத்து மல்லாந்து படுத்தார். கண்ணுக்கு நேரே கூரையில் கல் தாமரை? இதவான மோனம் சூழ்ந்தது.

கோவிலுக்கடுத்தாற் போலேயே சொப்பாட்டம் வீடு. ஒரு சின்ன அறை. அதற்கேற்ற கூடம். இந்த இரண்டு கட்டைகளுக்குப் போதாதா?

அகிலா இரண்டாவது ஜாமத்தில் இருப்பாள். அவளுக்கு இப்போ கொஞ்சம் முடியல்லே. வயசாகல்லியா? இரண்டு பேருக்கும் வயசு வித்தியாசம் அஞ்சுக்குள். உறவு விட்டுப் போகாமல் இருக்க அவளுக்கு அஞ்சு வயசிலேயே போட்ட முடிச்சு. சட்டம் இருந்தாலும் கிராமத்துள் எட்டாது.

ஆனால் புத்ர பாக்யம் இல்லை. விரதங்கள் முழிச்சது தான் மிச்சம். யார்மேல் குத்தம்னு ஆராய விஞ்ஞானம் அந்த அளவுக்கு அப்போது வளரவில்லை. வளர்ந்திருந்தாலும் அதன் உதவியைத் தேடத் தோன்றியிருக்காது. நமக்கு ப்ராப்தி அவ்வளவுதான்; அகிலாண்டேசுவரியின் சித்தம், அதனால் நம் வசத்தில் என்ன இருக்கு?

உறவில் ஒரு பையனை ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டார்.

பின்னால் தனக்கு வாரிசாயிருப்பான் என்று வரித்த பையன், ஒருநாள், கிழங்காட்டம் பொன் கட்டிய அவருடைய ருத்ராக்ஷ கண்டியை எடுத்துக்கொண்டு ராவோடு ராவாய் மறைந்தவன், போனவன் போயே போனாண்டி ஆனபின் ஆத்திரப்பட்டு, அழுது ஓய்ந்தபின், அகிலா ஒருமுறை கைகொட்டிச் சிரித்துவிட்டு, “இனி உங்களுக்கு நான் குழந்தை. எனக்கு நீங்கள் குழந்தை” என்று தேற்றினபோது,