பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124 ❖ லா. ச. ராமாமிர்தம்


அவள் தோளைத் தொட்டபடி, வாசற்படி தாண்டியதும், அவளுக்குக் கழுத்திலிருந்து கால்வரை-“ஜிவ்”-உயிர் வெளியே குதிக்கும்போல் பரபரப்பு, ஆனந்தம், பயம். கையை மார்க்குலையில் அழுத்திக்கொண்டாள்.

“ஏண்டிம்மா குழந்தே, மாப்பிள்ளையைக் கூட அழைச்சுண்டு வரப்படாதோ?”

“அவர் மாப்பிள்ளையாச்சேம்மா. அவர் எப்பவும் மாப்பிள்ளை முறுக்குத்தான். எனக்குப் பிறந்தாத்து எண்ணம் வந்துடுத்து, வந்துட்டேன்.”

“குழந்தே, நீ உறவு கொண்டாடச்சே, எனக்கு உன்னைப் பெத்த சந்தோஷமே வரது.”

“ஏம்மா, பெத்தால்தான் உறவா? பாவனைதான் உறவு, ரெண்டு பேரும் சேர்ந்து நில்லுங்கோ, நமஸ்காரம் பண்றேன்.”

“பண்ணடி கண்ணே , மகராஜியாயிரு.”

அவர் கண்கள் பயத்தில் சுழன்றன. தடுக்க முயன்ற கைகளைச் சிரமப்பட்டு, பின்னுக்கு இழுத்துக் கொண்டார்.

நமஸ்கரிப்பில் குனிந்த அவள் முகம் நிமிர்கையில், கூடத்து ஜன்னல் வழி வெயில் பட்டு, முகமே சிவப்பாய் ஏற்றிக்கொண்டது.

ஜ்வாலாமுகி.

அகிலா கண்களைக் கசக்கிக்கொண்டாள். ஊஹும் ஒன்றுமில்லையே. அந்தப் பெண் எழுந்து நின்றுகொண்டிருந்தாள்: “நீங்கள் இப்படி வாழ்த்தி வாழ்த்தித்தான் நான் வயசுக்குமீறிக் குதிரையா வளர்ந்துட்டேன்.” ‘ஹும்’-மூக்கைச் சுருக்கிக்கொண்டாள். “கம்முனு வாசனை! அப்பா பசிக்குது.”