பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8
வேண்டப்படாதவர்கள்

வீட்டின் கொல்லைப்புறம் தாண்டி மரங்களும் செடி கொடிகளும் புதர்களும் அடர்ந்தன. பூமிமேல் உதிர்ந்த இலைகளும் சருகுகளும் காலடியில் புதைந்து புதைந்து ஜமக்காளம் விரித்தாற்போல் பரவிக் கிடந்தன.

அந்த இடமெல்லாம் விலையாகி விட்டதாகக் கேள்வி. ஆனால் இன்னும் கட்டிடங்கள் எழும்பவில்லை. இப்போதைக்கு முயற்சி இருப்பதாகவும் தெரியவில்லை.

அவர் ஆபீஸ் போனபின் தன் சாப்பாட்டையும் அடுக்குள் காரியங்களையும் முடித்துக்கொண்டு வாசற்கதவைத் தாளிட்டுவிட்டு, உஷை அனேகமாய் இங்கேதான் பொழுதைக் கழித்துக் கொண்டிருப்பாள். ஒரு மரத்தின் மேல் சாய்ந்தபடி, புட்களின் அரட்டையைக் கேட்டபடி, மெல்லிய காற்றின் மூச்சில் சருகுகள் அசைவதைப் பார்த்துக் கொண்டு இலைகளின் சந்து வழி பாயும் ஒளிக்கதிரில் கண் கூசிக்கொண்டு உட்கார்ந்திருப்பாள். சமயங்களில் மரத்தில் சாய்ந்தபடியே அரைத் தூக்கத்தில் கண் சொக்கி விடுவதுமுண்டு. பூச்சி பொட்டுக்களைப் பற்றிக் கவலை, விழித்துக் கொண்ட பின்னர்தான். இதுவரை ஏதும் நேராதவரை பயமில்லை.

கோபி எங்கே? நினைப்பு வந்து ‘வெடுக்’கென்று விழிப்பு வந்துவிடும். அவன் ஏதேனும் பட்டாம்பூச்சியைத்