பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வேண்டப்படாதவர்கள் ❖ 137



ஆனால், அதுபற்றியும் கவலைப்பட்டுக் கொண்டேயிருக்க முடியாது. நலமோ, கேடோ அவளாவாளுக்கு அவா அவா இடமென்று ஆகிவிட்டது. ஆண்களுக்கு உத்யோகம், பெண்ணுக்குப் புக்ககம். ஆயிரம் திட்டம் போட்டாலும், வாய்ப்பு என்று இரண்டிலுமே இருக்கு. இஷ்டப்பட்டால் விதியென்று சொல்லிக்கோ.

உஷை பெருமூச்செறிந்து எழுந்தாள்.

“வாடா கோபி போகலாம்!”

ஆனால், கோபி கண்ணில் படவில்லை.

சரி, வரப்போ வரட்டும்.

வீட்டை நோக்கி நடந்தாள்.

2

பையன், எதிரே பாறைமேல் பார்வை பதிந்தபடி, வளைந்து கோணிக் கொண்டிருக்கும் ஒரு வேர்மேல், பையன்களின் சுபாவப்படி, இசைகேடாய் அமர்ந்திருந்தான்.

ஒருமுறை, அக்காவும் தம்பியும் அதை ஏற முயன்று பாதியில் முடியாமல், இறங்க முடிந்ததே புண்ணியம் என்று பூமியில் பாதம் பதிந்த உடனேயே அவனைத் தனியாக ஏறக் கூடாதென்று கிருஷ்ணா கடுமையாய் எச்சரித்திருக்கிறாள்.

இச்சமயம் அவன் எண்ணங்கள் என்ன வடிவம் எடுத்தன என்று அவன் அறியான். அவற்றுக்கு வகுத்த பாதை கிடையாது. கோடுகள், வளைவுகள், நெளிவுகளாய் ஆரம்பித்து ஏதோ ஒரு உருவின் வரைவில் ஒன்று கூடுமோ? பிறகு அந்த உருவுக்கு அசைவு வருமா?

ஒன்று முழு உரு ஆகுமுன்னரே, ஒன்றன்மேல் ஒன்று